தர்மபுரி: கடந்த ஒரு மாதமாக தூக்கமில்லை, நான் என்ன தப்பு செய்தேன், ஏன் மாற்றப்பட்டேன் என்று பாமக செயல் தலைவர் அன்புமணி வேதனையுடன் பேசியுள்ளார். பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தானே தலைவராக இருப்பதாகவும், அவர் செயல் தலைவராக இருப்பார் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
இதையடுத்து அவர்களுக்குள் மோதல் முற்றியது. பனையூரில் தனியாக அலுவலகம் தொடங்கி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்தார். அதற்கு பதிலடியாக ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், சமூக நீதி பேரவை நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்தடுத்து கூட்டினார். இந்த கூட்டங்களில் அன்புமணி பங்கேற்காமல் புறக்கணித்ததோடு, தனது ஆதரவாளர்களையும் பங்கேற்க வேண்டாம் என கூறிவிட்டார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக மூத்த நிர்வாகி கனல் ராமலிங்கம் படத்திறப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக செயல் தலைவர் அன்புமணி கலந்துகொண்டு, படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: மாமல்லபுரம் மாநாட்டில், நான் பெரியவன், நீ பெரியவன் என்பதில்லை. தட்டிக்கொடுத்து தான் வேலை வாங்கனும். மாநாட்டுக்கு முன்னாடி சத்ரியனா இருக்கக்கூடாது. சாணக்கியனாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். நாம் எப்போது வேகமாக இருக்க வேண்டும் என்பதை, நான் சொல்கிறேன். அதுவரை அமைதியாக இருங்கள். அய்யா வழியில், அவர் லட்சியங்களை நிறைவேற்றுவோம். அவர் வழியில் தான் பயணிக்கிறோம். அவர் கட்சி தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்ற போறோம்.
கடந்த ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை. என் மனதிற்குள் பல கேள்வி. நான் என்ன தப்பு பண்ணேனு. ஏன் நான் மாற்றப்பட்டேன். என் கனவு, என் லட்சியம் எல்லாமே, அய்யா என்ன நினைச்சாரோ அதைத்தான் நிறைவேற்றினேன். இனியும் ஒரு மகனாக அய்யா என்ன நினைக்கிறாரோ அதை தான் நிறைவேற்றுவேன். இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அணுகுவோம். வெற்றி பெறுவோம். நமது முதல் வெற்றியே வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியாக இருக்கும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு படி ஏறினால், 10 படி இழுத்து விடுகிறார்கள். 2026ம் ஆண்டு தமிழகத்தில் நமது கூட்டணி ஆட்சி வரும். தொண்டர்கள் யாரும் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
வேகத்தை விட விவேகமாக சிந்தியுங்கள். கடந்த ஒரு மாத காலமாக எனக்கு கடும் மன உளைச்சல் உள்ளது. நான் என்ன தவறு செய்தேன். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான், நான் செயல்பட்டு வருகிறேன். இனியும் அவ்வாறு தான் செயல் படுவேன். இவ்வாறு அன்புமணி பேசினார். நிகழ்ச்சியில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாவட்ட தலைவர் அல்லிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*பாமகவில் அதிரடி மாற்றங்கள்? அடுத்தடுத்து கூட்டம் போடும் ராமதாஸ்
பாமக முன்னாள் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரிடம் நேற்று முன்தினம் ராமதாஸ் கலந்துரையாடினார். அன்புமணியுடன் மோதல் இல்லை என்று ராமதாஸ் கூறிவந்தாலும், ரகசியமாக திடீரென நடத்திய இக்கூட்டத்தால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்று (25ம் தேதி) காலை 10 மணியளவில் பாமகவின் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ைதலாபுரத்தில் நடக்கிறது. இத்தகவலை ஏற்கனவே ராமதாஸ், செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்த நிலையில் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் என்பதால் ரகசியம் காக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாளை (26ம் தேதி) பாமக தொழிற்சங்கத்தினருடனான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பாமகவில் அதிரடி மாற்றங்களுக்கான முன் நடவடிக்கையாக இந்த கூட்டங்களை ராமதாஸ் நடத்துகிறாரா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
The post என்ன தப்பு செய்தேன்? ஏன் மாற்றப்பட்டேன்? ஒரு மாதமாக தூக்கமில்லை: அன்புமணி கதறல் appeared first on Dinakaran.