சென்னை,
'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் ஜீவா, இயக்குநர் கே.ஜி பாலசுப்பிரமணி உள்ளிட்ட பிளாக் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது நடிகர் ஜீவா பேசுகையில்,"இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனே பிடித்தது. காரணம் பல நடிகர்களிடம் இந்த கதை சென்று திருத்தப்பட்ட ஒன்றாக வந்தது. அதனாலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஆங்கில படத்தின் ரீமேக் ஆனால் அதை நான் பார்க்கவில்லை. இயக்குநர் என்ன கதை கூறினாரோ அதை அப்படியே நடித்துள்ளேன். என்னுடைய 21 வருட திரை பயணத்தில் முக்கியமான படமாக 'பிளாக்' அமைந்துள்ளது. நான் திரைக்கு வந்த முதல் 10 வருடத்தில் பல புதிய முயற்சிகளை எடுத்தேன். அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தில் அப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளேன்.
நிச்சயம் இந்த திரைப்படம் வித்தியாசமான அதேநேரம் சுவாரசியமான படமாக இருக்கும். படம் புரியவே மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என தோன்றும். இந்த படத்தில் நான் மட்டும் தான் உங்களுக்கு பொழுதுபோக்கு அதற்கு காரணம் படம் முழுக்க சீரியஸ் ஆக செல்லும். நான் தனியாக இருப்பேன்.
என்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த படம் உதவியாக இருந்தது. இந்த கூட்டணியுடன் பல படங்கள் பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறேன். படத்தின் டப்பிங் பணியின் போது நண்பர்கள் சில காட்சிகளைப் பார்த்து படத்தில் எதோ ஒன்று உள்ளது எனக் கூறினர். என்னுடைய திரை பயணத்தில் இந்த பிளாக் திரைப்படம் முக்கிய படமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.