சென்னை,
கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது ரஜினியின் மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை சுருதிஹாசன் தனது பெற்றோர் குறித்து பேசி உள்ளார். அதில், "கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமைதான் என்றாலும் அனைவருமே என்னை கமலின் மகள் என்று தான் சொல்கிறார்கள். என் அப்பாவின் புகழ் சில சமயங்களில் எனக்கு சுமையாக இருக்கிறது. இதன் காரணமாக எனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். என் அப்பாவும் அம்மாவும் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக இப்படி பிரிந்து வாழ்வது என்னையும் என் தங்கை அக்சராவையும் பெரிதும் பாதித்துள்ளது. என் தந்தையின் புகழ் வெளிச்சத்திலிருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. அதன் காரணமாக சென்னையே எனக்கு பிடிக்கவில்லை. இங்கிருப்பவர்களை வெறுப்பாக உணர்ந்தேன். இருந்தாலும் தந்தையால் எனக்கு கிடைக்கும் பெருமையை நான் ஒத்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.