![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39094964-chennai-07.webp)
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வரலாற்றிலேயே முதல் முறையாக பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தால் இன்று முதல் 14.02.2025 வரை 3 நாட்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசுத்துறைகளிலிருந்து 25 அலுவலர்கள் தமிழ்நாடுஅரசினால் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் முதல்வரின் முகவரித் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை, கூட்டுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத் துறை, வணிகவரித் துறை, சென்னை மநாகராட்சி, பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத்துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை, மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண் துறை, ஆகிய துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு மொத்தம் 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவிற்கே முன்னோடியாக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் யாருக்கும் விடுபடாமல் கடைக்கோடி மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளபடி இப்பயிற்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.