?எந்தெந்த காரணங்களால் ஒருவருக்கு நாகதோஷம் ஏற்படும்? இதைப் போக்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

3 weeks ago 4

– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பரம்பரையில் இருந்துவரும் பிரச்னைகளை நாகதோஷத்தின் மூலமாக அறியலாம். ஜோதிடத்தில் நாகதோஷம் என்பது ராகு – கேதுக்களைக் கொண்டு அறியப்படுகிறது. இந்த ராகுவை பிதாமஹகாரகன் என்றும் கேதுவை மாதாமஹகாரகன் என்றும் அழைக்கிறார்கள். அதாவது தந்தைவழி பரம்பரையில் இருந்து வரும் நன்மை தீமைகளை ராகுவும், தாய் வழி பரம்பரையில் இருந்து வரும் நன்மை தீமைகளை கேதுவும் கடத்துகின்றன. இந்த ராகு – கேதுவினால் தீமை மட்டும்தான் நடக்கும் என்றில்லை, நன்மையும் நடக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ராகு-கேதுவின் அமர்வுநிலையைக் கொண்டு அது தோஷமாக இருக்கிறதா அல்லது யோகமாக இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடரின் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். காரணமின்றி நாகங்களைக் கொன்று இருந்தாலும், அவைகளின் இருப்பிடமான புற்றினை அழித்திருந்தாலும், அதனால் அந்த பரம்பரைக்கே கடுமையான நாகதோஷம் வந்து சேரும் என்று சொல்வார்கள். இதனால் வம்சத்தில் பாதிப்பு, குழந்தையின்மை, மனநோய் போன்ற கடுமையான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இந்த தோஷத்தை முழுமையாக போக்க இயலாது. சர்ப்பசாந்தி, அரசமரத்தடி நாகர் வழிபாடு, புற்று வழிபாடு போன்ற பூஜைகளின் மூலம் அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ள இயலும். இது அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதன் வீரியத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் பரிகாரம் செய்து பலன் அடைவதே நல்லது.

?கிழக்கே சூலம், மேற்கே சூலம், தெற்கே சூலம், வடக்கே சூலம் என்று கூறப்படுகிறதே, சூலம் என்றால் என்ன? விளக்கவும்.

– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
சூலம் என்றால், சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருப்பது என்று பொருள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சூரியனின் தீட்சண்யம் அந்த திசையில் குவியும் என்பதை சூலம் என்ற பெயரில் குறிப்பிட்டிருப்பார்கள். இதனை அறிந்து கொள்வதால் என்ன பயன் கிடைக்கும் என்றால், பெரும்பாலும் இந்த சூல தோஷம் என்பது பயணத்திற்காக சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஞாயிறு – வெள்ளி மேற்கே சூலம், திங்கள் – சனி கிழக்கே சூலம், செவ்வாய் – புதன் வடக்கே சூலம் மற்றும் வியாழன் அன்று தெற்கே சூலம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில், சூலதோஷம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் வரை பயணம் செய்யக்கூடாது என்பதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார்கள். அவசியம் பயணம் செய்தே ஆக வேண்டும் என்று வரும்போது, அதற்குரிய பரிகாரத்தையும் சொல்லியிருப்பார்கள். சூல் கொண்ட மாதர்க்கு சூலம் முக்கியம் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். கர்ப்பிணி பெண்கள் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு பிரசவத்திற்காகச் செல்லும்போதும், பிரசவம் முடிந்து பிறந்த குழந்தையுடன் மீண்டும் புகுந்தவீட்டிற்குச் செல்லும்போதும், இந்த சூலத்தினை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதே போல, புதுமனை புகுவிழா செய்யும்போதும் சூலம் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, வடக்கு நோக்கிய வாசல் என்றால், வியாழன் அன்று க்ருஹப்ரவேசம் செய்யக் கூடாது. ஏனெனில் வியாழன் அன்று தெற்கே சூலம் என்று கொடுத்திருப்பார்கள். வடக்கு நோக்கிய வாசல் உள்ள வீட்டிற்குள் தெற்கு நோக்கி உள்ளே நுழைய வேண்டும் என்பதால், அந்த நாளில் புதுமனை புகுவிழா என்பதை செய்யக் கூடாது. அவ்வாறு சூலம் பார்க்காமல் பயணிக்கும்போதோ அல்லது புதுமனை புகுவிழா செய்யும்போதோ உடல்நலம் என்பது பாதிப்பிற்கு உள்ளாகிறது என்பதே நம் முன்னோர்கள் அனுபவ ரீதியாக கண்டிருக்கும் உண்மை. அதனால்தான் இந்த சூலம் என்பதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

?எரிகின்ற விளக்கை ஆண்கள் அணைக்கக் கூடாது என்கிறார்களே, ஏன்?

– வண்ணை கணேசன், சென்னை.
எரிகின்ற விளக்கை யாருமே வாயால் ஊதி அணைக்கக் கூடாது. இதில் ஆண் – பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அவசியம் அணைத்துத்தான் ஆக வேண்டும் என்ற சூழல் வரும்போது, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, திரியை உள்ளே இழுத்துவிட்டோ அல்லது மலர்களைக்கொண்டோ “ஓம் சாந்தி’’ என்று சொல்லி அணைக்கலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

?சத்ரு சம்ஹார யாகம் என்பது என்ன?

– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
எதிரியை வெற்றி காண்பதற்காக செய்யப்படுவதே சத்ரு சம்ஹார பூஜை ஆகும். இது சுப்ரமணிய ஸ்வாமியை பிரதானமாக வைத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் திருத்தலத்தில் இந்த பூஜை நடக்கும். சத்ரு சம்ஹாரம் என்றால், எதிரியை அழிப்பது அல்ல, எதிரியையும் நல்லவனாக மாற்றுவது என்று பொருள் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியையே நினைவில் கொண்டு வரலாம். சூரபத்மன் மாமரமாக உருமாறி நிற்கும்போது, முருகப் பெருமானின் வேல் அந்த மரத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாகம் மயிலாக மாறி பெருமானின் வாகனம் ஆகவும், மற்றொரு பாகம் சேவலாக மாறி பெருமானின் கொடியிலும் இடம் பிடிக்கிறது அல்லவா, அதுபோல நமது விரோதியும் நல்லவனாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுவதே சத்ரு சம்ஹார பூஜை ஆகும். எதிரியை அவனது மனமாற்றத்தின் மூலம் வெற்றி காண்பதற்காக செய்யப்படுகின்ற பூஜை என்று நீங்கள் பொருள் காணலாம்.

?வீட்டில் மகாமேருவை வைத்து வழிபடலாமா? எப்படி வழிபடுவது?

– ஜெ.மணிகண்டன், வேலூர்.
ஸ்ரீ வித்யா உபாசனையில் உள்ளவர்கள் மட்டுமே மேருவை வைத்து வழிபட இயலும். இதற்கு முறையாக ஒரு குருவிடம் சென்று மந்த்ர உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை தினமும் ஜபம் செய்ய வேண்டும். அதன் பின்னர், அதே குருவின் மூலம் உபாசனைக்கு உரிய விதிமுறைகளைக் கற்றுக்கொண்டு, அவர் மூலமாகவே மேருவையும் பெற்று பூஜை செய்து வழிபட வேண்டும். கடையில் இருந்து வாங்கி வந்து வைத்து வழிபடுவதால் பலன் என்பது கிடைக்காது.

?குழந்தைகளுக்கு எத்தனை வயதில் ஜாதகம் எழுத வேண்டும்?

– டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
ஒரு வயது முடிந்தவுடன் ஜாதகம் எழுதலாம். அதாவது குழந்தைக்கு குலதெய்வம் கோயிலில் வைத்து சிகைநீக்கி (மொட்டை) அதன் பின்னர் காதணிவிழா செய்தவுடன் ஜாதகம் எழுத வேண்டும். முதல் வயது நிறைவடையும்போது ஆயுஷ்ய ஹோமம் செய்யும் வழக்கமும் ஒரு சில குடும்பங்களில் உண்டு. அவ்வாறு ஆயுஷ்ய ஹோமம் செய்தவுடன் ஜாதகத்தை எழுதிவிடலாம்.

திருக்கோவிலூர்: K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ?எந்தெந்த காரணங்களால் ஒருவருக்கு நாகதோஷம் ஏற்படும்? இதைப் போக்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article