
சென்னை,
கவர்னருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. விழாவுக்கு திராவிடா் கழகத் தலைவரும், பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான கி.வீரமணி தலைமை வகித்தார். உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு மூலம் பூனைக்கு மணி கட்டியுள்ளனர். கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது மிகப்பெரிய வெற்றி. ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை ஜனாதிபதி எடுத்துக்கொண்டால் தாங்கி கொள்வாரா? எந்த காலத்திலும் உரிமையை விட்டுத்தர மாட்டோம்.
தீர்ப்பு தந்த நம்பிக்கையோடு மாநில சுயாட்சியை மீடெடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்தியாவுக்கு இன்றைக்கு நான் முன் மாதிரியாக இருப்போம். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவிற்கு வாக்களித்த மக்கள்தான் சுயாட்சி நாயகர்கள். பாராட்டு விழா என்று யாராவது கேட்டால் நான் நேரம் அளிக்க மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்ரி என்பதால் பாராட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கினேன். மத்திய அரசின் ஏஜெண்டாக உள்ள கவர்னர் திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? கவர்னர் பதவி என்பது எந்த பயனும் இல்லத ரப்பர் ஸ்டாம்ப் போன்றது" இவ்வாறு அவர் பேசினார்.