சென்னை,
மருத்துவப் படிப்புகளில் தேர்வுக்கு மேல் தேர்வு என்று பல தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. காலாகாலமாக பிளஸ்-2 இறுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வந்த நிலையில், திடீரென்று 2016-ம் ஆண்டு மத்திய அரசாங்கம், "ஒரே படிப்பு; ஒரே தேர்வு" என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு எழுதி மருத்துவப் படிப்புகளில் சேர முயற்சிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 'தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு' என்று சொல்லப்படும் "நீட்" தேர்வை எழுத வேண்டும் என்ற முறையை கொண்டுவந்தது.
இதற்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. சட்டசபையில் தீர்மானங்கள் மட்டுமல்லாமல், மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூன் 28-ந்தேதி கூட "நீட்" விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் தரவேண்டும் என்ற தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் "நீட்" தேர்வை ரத்து செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இணைத்து கடிதம் அனுப்பினார். ஆனால், இது எதற்கும் மத்திய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இப்போது தலைவலி போய் திருகு வலி வந்த கதையாக "நீட்" மட்டுமல்ல இப்போது 'நெக்ஸ்ட்' தேர்வும் வந்துவிட்டது என்று மாணவர்கள் குழம்பும் வகையில், அடுத்தடுத்து மற்ற தேர்வுகளையும் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த தேர்வுகள் அமலுக்கு வருகின்றன என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
"நீட்" தேர்வு எழுதி இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் 4½ ஆண்டுகள் அதாவது, 54 மாதங்கள் முடிந்த பிறகு மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக சேருவதற்கு முன் 'நெக்ஸ்ட் நிலை-1' தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராக தொடரமுடியும். ஏற்கனவே மருத்துவப் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டு படிப்புக்கு செல்லும் நிலையில், எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும்போதும் செமஸ்டர் தேர்வுகளுடன், 'நெக்ஸ்ட் தேர்வு நிலை-1' தேர்வையும் எழுத வேண்டியது இருக்கிறது.
இதோடு தேர்வு முடிந்து விட்டதா? என்றால் அதுதான் இல்லை. ஒரு ஆண்டு பயிற்சிக்கு பிறகு டாக்டர் பணிக்கான சான்றிதழ் பெறவும், மேல்படிப்புக்கு செல்லவும் மற்றொரு தேர்வாக 'நெக்ஸ்ட் தேர்வு நிலை-2' என்ற தேர்வையும் எழுத வேண்டும். ஆக, ஜமுக்காளத்தில் ஒரு முறை வடிகட்டுவதோடு நின்றுவிடாமல் மீண்டும்.. மீண்டும்.. வடிகட்டுவதைப் போல நிலைதான் இது. பல மாணவர்களுக்கு இது பெரிய சிரமங்களை ஏற்படுத்தும். ஏற்கனவே 2019-ம் ஆண்டிலேயே இந்த தேர்வை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் ஆண்டுதோறும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியதால், இதுவரை இந்த தேர்வு நடைமுறை தலைதூக்காமல், இந்த ஆண்டு திடீரென அமலுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.