எதிர்பார்த்ததை விட மெரினாவில் ஒரேநேரத்தில் குவிந்த கூட்டம் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

1 month ago 7

சென்னை: இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த சாகச நிகழ்ச்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை விட கூடுதலாக பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக மெரினா கடற்கரை நோக்கி படையெடுத்தனர். பொதுமக்கள் தங்கு தடையின்றி மெனாவில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் வகையில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 8000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எந்தவித பிரச்னையும் எழாத வகையில் அமைதியான முறையில், சாகச நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்து முடிந்தன. அதேபோல் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில், போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதில் தீவிரம் காட்டினர். மக்கள் அதிக அளவில் திரண்டு வந்தபோதும், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, குறுகலான இடங்களில் கூட பொதுமக்கள் வரிசைப்படுத்தி கடற்கரைக்கு அனுப்பப்பட்டனர். நிகழ்ச்சியை காண வரும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்த மாநில கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி, தனியார் பள்ளிகள் உள்பட 22 இடங்களில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், காலாண்டு விடுமுறை என்பதாலும், எதிர்பார்த்ததைவிட விமான சாகச நிகழ்ச்சியை காண வெளிமாவட்டங்களிலும் இருந்தும் பொதுமக்கள் சாரை சாரையாக சென்னை மெரினாவில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் வந்தன. ஏற்கனவே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியால், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், ஐஸ்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டு குறுகலான சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெரினா பகுதியை இணைக்கும் சாலைகளில் கார், பைக்குகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாத நிலையில் போக்குவரத்து போலீசார் திணறினர்.
பலர் மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்ேபட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ஜாம்பஜார், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சாலைகளில் கிடைத்த இடங்களில் எல்லாம் தங்களது கார்கள் மற்றும் பைக்குகளை நிறுத்திவிட்டு சென்றதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் போக்குவரத்து இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 2 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் சாகச நிகழ்ச்சி முடிந்து ஒரே நேரத்தில் பொதுமக்கள் மெரினாவில் இருந்து வீடுகளுக்கு திரும்பியதால் மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி பகுதிகளில் முற்றிலும் வாகன போக்குவரத்து முடங்கின. இந்த வாகன நெரிசலால் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்று சாந்தோம் நெடுஞ்சாலை, அடையார், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது போக்குவரத்தை பொருத்தமட்டில் சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலால் பல இடங்களில் பாதி வழியில் திருப்பப்பட்டன.

அதேபோல் பறக்கு ரயில் வழக்கம் போல் இயங்காமல், ஞாயிறு கால அட்டவணைப்படி இயங்கியதால், அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதனால் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை இயக்கப்பட்ட பறக்கும் ரயிலில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்தனர். இதனால் பறக்கும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையங்களில் உரிய நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் பொதுமக்கள் காத்துக் கிடந்து அவதி அடைந்தனர்.‘‘ஒன்றிய அரசின் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் மற்றும் தாம்பரம்-கடற்கரை மார்கமாக இயக்கப்படும் ரயில், ஞாயிறுகால அட்டவணைப்படி இயங்கியதால் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்” என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ”வழக்கமாக சேத்துப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் 10 லட்சம் பேர் கலந்து கொண்ட மெரினாவில் நடந்த 2 மணி நேர சாகச நிகழ்ச்சிக்கு பொதுபோக்குவரத்துக்கு முறையாக ஏற்பாடு செய்யாததால் சென்னையில் நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டன” என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

 

The post எதிர்பார்த்ததை விட மெரினாவில் ஒரேநேரத்தில் குவிந்த கூட்டம் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article