மாதவரம்: எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளை முறியடித்து திமுக வெற்றிக்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆ.ராசா எம்பி கூறினார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாதவரம் லட்சுமிபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில், துணை பொதுச்செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஆ.ராசா எம்பி கலந்துகொண்டு பேசியதாவது;
ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய கூட்டணியில் உள்ள அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசை வீழ்த்துவதற்காக பல்வேறு குறுக்கு வழிகளை பயன்படுத்துவதோடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நமது கட்சி மீது பல்வேறு அவதூறுகளை பரப்பி மக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்வார்கள். எனவே தொண்டர்கள்விழிப்புணர்வுடன் இருந்து அதனை எதிர்கொண்டு பொதுமக்களிடம் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும்.
வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் இணைந்து முதல்வரின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்துவரும் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திமுக வேட்பாளரை சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் துக்கராமன், புழல் நாராயணன், தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், அருள்தாசன், ஒன்றிய செயலாளர்கள் மீ.வே.கருணாகரன், அற்புதராஜ், மண்டல குழு தலைவர் நந்தகோபால் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post எதிர்க்கட்சிகள் திட்டத்தை முறியடித்து திமுக வெற்றிக்கு பாடுபடவேண்டும்: ஆ.ராசா எம்பி பேச்சு appeared first on Dinakaran.