எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்: மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு

1 day ago 3

டெல்லி: திமுக உட்பட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாளை வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 4ம் தேதியுடன் கூட்டத் தொடர் முடிவதால், இந்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அவசரம் காட்டி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டமானது சிறுபான்மை முஸ்லிம் மக்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சித்தது. தற்போது சிறுபான்மை முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் வகையில் வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வர ஆர்வம் காட்டி வருகிறது. வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்தது.

இந்த சட்ட திருத்தங்கள் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருந்ததால், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதனால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை நிராகரித்தது. இந்த குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் எந்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் மட்டுமின்றி முஸ்லீம் அமைப்புகளும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசின் தரப்பில் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வரதிட்டமிட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், ‘வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கையில், பல உறுப்பினர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களை மட்டும் அறிக்கையில் குறிப்பிடுவது சரியல்ல. இது கண்டனத்துக்குரியது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது போலி அறிக்கை. இந்த அறிக்கையை திரும்ப பெற்று மீண்டும் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக எம்பிக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த சட்ட திருத்த மசோதாவில் ஒரு பிரிவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கைளை மறுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘கூட்டுக் குழு அறிக்கையில் இருந்து எந்த கருத்தும் நீக்கப்படவில்லை. அவையை தவறாக வழிநடத்த வேண்டாம்.

தேவையில்லாத பிரச்னையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புகின்றனர். இந்த குற்றச்சாட்டு பொய்யானது. அனைத்து குறிப்புகளும் கூட்டுக் குழு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. எதுவும் நீக்கப்படவில்லை’ என்றார். நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, ஒன்றிய அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒன்றிய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், வரும் 4ம் தேதியுடன் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில், நாளை (புதன்கிழமை) மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படும் நிலையில், அடுத்த நாள் (வியாழக்கிழமை) மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மசோதா தாக்கலின் போது உறுப்பினர்கள் முழுமையாக அவையில் இருக்குமாறு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தி உள்ளார். மேலும் மேற்கண்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சிகளின் எம்பிக்களுக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதேபோல், ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளும் தங்களது உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. இதற்கிடையே நாளை டெல்லியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வரும் 4ம் தேதியுடன் கூட்டத் தொடர் முடிவதால் அவசர அவசரமாக வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதால் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

வக்பு மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு
இதனிடையே வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நாளை (ஏப்ரல் 2) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், இஸ்லாமிய அமைப்புகளும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ரமலான் பண்டிகையை கொண்டாடிய நிலையில், இஸ்லாமிய மக்கள் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து ரமலான் பண்டிகையை கொண்டாடினர்.

The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்: மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article