எதிர்காலத்திற்கு ஏற்ப செயல்படுவோம் மாநகராட்சி பூங்காக்கள் ஆக்கிரமிப்பு விரைவில் முறைபடுத்தப்படும்

3 weeks ago 4

*கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

தூத்துக்குடி : புதியதாக கால்வாய், வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டதால் தூத்துக்குடி மாநகரில் பெரிய அளவிலான வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேசிய மேயர் ஜெகன்பெரியசாமி, ‘2021ல் தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்கட்சித்தலைவராக இருந்து பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த பிறகு உள்ளாட்சித்தேர்தல் வெற்றிக்குபின் 2வது முறையாக அதே பகுதியை பார்வையிட்டு இதுபோன்ற நிலைமை இனி வரக்கூடாது என்று நமக்கெல்லாம் அறிவுரை கூறியதின் பேரில் அனைவரும் இணைந்து பணியாற்றினோம்.

கடுமையான பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய், சாலை வசதிகள், வடிகால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு பெய்த கனமழையின் போது சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் சிறிய, பெரிய மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.

சில வழித்தடங்களின் மூலமும் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. பல இடங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினோம். அதன்பின் தொடர்ச்சியாக நாம் பணியாற்றியதின் மூலம் இந்தாண்டு பெரிய அளவில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களை பாதுகாத்தோம். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பே காரணம்.

புறநகர் பகுதிகளில் இருந்து வந்த வெள்ளநீரால் தூத்துக்குடி மாநகரத்தின் ஒருசில பகுதிகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பெரியஅளவில் பாதிப்பில்லை. தூத்துக்குடியில் கோரம்பள்ளம், செங்குளம், மாடன்குளம் உள்பட பல பகுதிகளில் உள்ள ஓடைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 206 பூங்காக்கள் இருக்க வேண்டிய மாநகராட்சி பகுதிகளில் சில பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை முறைப்படுத்துவோம்.

மேலும் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடும் வகையில் மாநகராட்சி பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.பின்னர், கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைசெல்வி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராமர், கண்ணன், முத்துமாரி, மந்திரமூர்த்தி, வீரபாகு, கந்தசாமி, இசக்கிராஜா, காந்திமதி, முத்துவேல் உள்ளிட்டோர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற பணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், தங்கள் வார்டு பகுதிகளில் உள்ள சிறுசிறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி கவுன்சிலர்கள் பேசினர்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளித்து பேசுகையில், ‘மற்ற பகுதிகளில் இருந்து வந்த மழைநீரினால் 16, 17, 18 வார்டு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதையும் பல்வேறு வகையில் முறையாக அப்புறப்படுத்தினோம். அதேபோல் பல பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்தை முழுமையாக பேணி பாதுகாக்கும் வகையில் பணியாளர்களும் களத்தில் உள்ளனர்.

2021க்கு முன் இருந்த நிலைமையை கண்டறிந்து அதனை மாற்றி கடந்த காலத்தில் திறம்பட செயலாற்றினோம், இனி வரும் எதிர்காலத்தை நினைத்து 2025ல் செயல்படுவோம். 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றி முறையாக பணிகள் நடைபெறும்’ என்றார். கூட்டத்தில், 100வது பிறந்தநாள் கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

The post எதிர்காலத்திற்கு ஏற்ப செயல்படுவோம் மாநகராட்சி பூங்காக்கள் ஆக்கிரமிப்பு விரைவில் முறைபடுத்தப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article