தேங்காயை நேரடியாக விற்பனை செய்வது ஒருவகை வியாபாரம் என்றால் அந்த தேங்காயைக் கொண்டு தேங்காய் எண்ணெய், தேங்காய் நார் என மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது இன்னொரு வியாபாரம். இப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதுதான் சிறந்த யோசனையும்கூட. அதனை லாபகரமான முறையில் செய்து வருபவர்தான் முருகேசன். குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே உள்ள மத்தியோடு கிடாரன்விளையை சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் கிடைக்கும் தேங்காயைக்கொண்டு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். முருகேசனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தோம். உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றதும் பேசத்தொடங்கினார் முருகேசன்.பள்ளிப்படிப்பு முடித்தபிறகு நகைக்கடை, பேன்ஸி ஸ்டோர் போன்ற இடங்களில் வேலை பார்த்து வந்தேன். அதன்பின், சொந்தமாக ஆட்டோ எடுத்து ஓட்டி வந்தேன். அந்த சமயம்தான் எங்கள் பகுதியில் விவசாயம் சங்க கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டேன். அங்கு சென்றபிறகுதான் தோட்டக்கலை, வேளாண்மைத் துறை அதிகாரிகளின் தொடர்பு கிடைத்தது. அதன்பிறகுதான், வேளாண்மை சார்ந்த தொழில் ஏதாவது தொடங்கலாம் என யோசனையும் வந்தது. எங்கள் பகுதியில் தேங்காய் அதிகம் கிடைத்து வருவதால் அதனை வைத்து கொப்பரை தயார் செய்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். அதனால் தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி வேளாண்மைப் பொறியியல் துறையை நாடினேன் எனக்கூறும் முருகேசன் மேலும் கூறினார்.
வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவியால் சோலார் டிரையர் வாங்கினேன். பிறகு, எங்கள் பகுதியில் இருந்து தேங்காய் விலைக்கு வாங்கி சோலார் டிரையரில் உலர்த்தி கொப்பரையாக்கி விற்பனை செய்தேன். எண்ணெய் தயாரிக்கும் வேறு நபர்களுக்கு கொப்பரையை விற்பதை விட நாமே நமது கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம் என முடிவுசெய்தேன். அதனால், வங்கியின் உதவியோடு இயந்திரச்செக்கு ஒன்றை வேளாண்மைத் துறை மூலம் வாங்கினேன். சோலார் டிரையரும், இயந்திரச்செக்கும்தான் எனது தொழிலின் மூலதனம். சோலார் டிரையரில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் தேங்காயை உலரவைக்கலாம். தேங்காயை வெயிலில் உலர வைக்கும்போது தேங்காயில் உள்ள நீர்ச்சத்து குறைந்து காய்ந்துவிடும். அதன்பிறகு அந்த தேங்காயை சோலார் டிரையரில் உலரவைப்பேன். 5 நாட்கள் வரை உலரவைத்த தேங்காயில் இருந்து கிடைக்கும் கொப்பரையைக் கொண்டு தேங்காய் எண்ணெய் தயாரித்து வருகிறேன். மழைப் பருவத்தில் 5 நாட்கள் உலர வைப்பதை நீட்டி 7 நாட்கள் தேங்காயை சோலார் டிரையரில் உலர வைப்பேன். சோலார் டிரையர் பயன்படுத்தும் போது அதிக வெப்பம் கிடைக்கிறது. வெளியே 25 செல்சியஸ் வெப்பம் என்றால், சோலார் டிரையருக்குள் 50 செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.
தேங்காய் விலைக்கு ஏற்ப எண்ணெய் விலையும் இருக்கும். தற்போது 2 ஆயிரம் தேங்காய் வாங்க ரூ.55 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதனை தவிர தேங்காயை உடைத்தல் உலரவைப்பு என வேலையாட்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதனால் ரூ.58 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகிவிடும். 2 ஆயிரம் தேங்காயில் இருந்து சுமார் 300 கிலோ கொப்பரை கிடைக்கும். கொப்பரையில் இருந்து 60 சதவீதம் அளவிற்கு எண்ணெய் கிடைக்கும்.ரூ.58 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து எண்ணெய் தயாரிக்கும் போது 15 சதவீதம் அளவிற்கு லாபம் கிடைக்கும். அப்படி என்றால் சுமார் ரூ.8 ஆயிரம் கிடைக்கும். ஒரு மாதத்தில் எனது சோலார் டிரையரில் 6 ஆயிரம் தேங்காய் வரை உலர வைத்து எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருவதால், எண்ணெய் மூலம் ரூ.25 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதனை தவிர விருதுநகரில் இருந்து நிலக்கடலை, எள் ஆகியவற்றை வாங்கி வந்து கடலை எண்ணெய், நல்லண்ணெய் தயார் செய்து விற்பனை செய்துவருகிறேன். தற்போது தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.250க்கும், கடலை எண்ணெய் ரூ.280க்கும், நல்லண்ணெய் ரூ.550க்கும் விற்பனை செய்து வருகிறேன் என மகிழ்கிறார் முருகேசன்.
தொடர்புக்கு:
முருகேசன்: 99654 50029.
இயந்திரச்செக்கில் எண்ணெய் தயாரிக்கும்போது அதோடு கருப்பட்டியும் சேர்ந்து அரைக்கிறேன். அதனால், எண்ணெய் நல்ல வாசமாக இருக்கும். இப்படி தயாரிக்கப்படும் எண்ணெய் 4 மாதம் வரை கெட்டுப்போகாது. எண்ணெய் தயாரிக்கும்போது தேங்காய்ப்புண்ணாக்கு கிலோ ரூ.40க்கும், கடலைப்புண்ணாக்கு ரூ.50க்கும்,எள்ளுப்புண்ணாக்கு ரூ.50க்கு விற்பனை செய்து வருகிறேன்.
The post எண்ணெய் முதல் புண்ணாக்கு வரை… தேங்காயில் மதிப்புக்கூட்டல்! appeared first on Dinakaran.