திருவொற்றியூர்: எண்ணூர் பகுதியில் கடந்த 2023 டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கச்சா எண்ணெய் கழிவு, அனல் மின் நிலையத்தின் சாம்பல் சகதி ஆகியவை கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால் தண்ணீர் மாசடைந்ததோடு, அலையாத்தி காடுகள் மீதுபடர்ந்தது. இதனால் பறவைகள் பாதிக்கப்பட்டன. மீன்களும் செத்து மிதந்தன. இதையடுத்து நீர்வளத்துறை மற்றும் மாசுக்காட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆற்று நீர் மற்றும் அலையாத்தி காடுகளில் படிந்து இருந்த கச்சா எண்ணெய் மற்றும் சாம்பல் கழிவுகளை அகற்றியதோடு, பாதிக்கப்பட்ட பறவைகளை மீட்டெடுத்தனர்.
ஆனாலும் இச்சம்பவத்தில் எண்ணூரில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருந்த அலையாத்தி காடுகளின் ஒரு பகுதி அழிந்தது. மேலும், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டதோடு வெளிநாட்டு பறவைகளின் வருகையும் குறைந்தது. இதையடுத்து இந்த அலையாத்தி காடுகளை பாதுகாத்து, விரிவுபடுத்த வனத்துறை திட்டமிட்டது. இதன்படி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சடையங்குப்பம், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி வரை கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் 1.75 லட்சம் அலையாத்தி செடிகள் மற்றும் பல்வேறு வகையான மரக் கன்றுகளும் நடப்பட்டன.
ஏற்கனவே, வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய சாம்பல் கழிவுகள் எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் பல ஆண்டுகளாக படிந்ததால் சுமார் 5 அடி உயரத்திற்கு சாம்பல் சகதிகள் தேங்கியதால், நீர் மாசடைந்து மீன், இறால், நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டதோடு அலையாத்தி காடுகளின் வளர்ச்சியும் குறைந்தது. இதனால், சுற்றுப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுதோடு, கன மழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் நீர் சீராக செல்ல முடியாமல் வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், ரூ.28 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள சாம்பல் சகதிகளை அகற்றி, மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்த வடசென்னை அணுமின் நிலையம் திட்டமிட்டது.
இதன்படி நீர்வளத் துறை மூலம் எண்ணூர் முகத்துவார ஆற்று மேம்பாலத்தில் இருந்து வடசென்னை அனல்மின் நிலைய நுழைவாயில் வரை சுமார் 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் கீழே படிந்துள்ள சாம்பல் சகதிகளை டிரஜ்ஜர் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாம்பல் சகதிகளை டிரஜ்ஜர் மூலம் உறிஞ்சி குழாய் வழியாக அலையாத்தி காடுகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று கொட்டி அதை மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
ஆனால் குழாய் வழியாக எடுத்து செல்லாமல் கொசஸ்தலை ஆற்றுக்கு அருகிலேயே மலைபோல் சாம்பலை குவித்து வைத்திருப்பதால் அலையாத்தி காடுகளும், செடிகளும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குவித்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் துகள்கள் காற்றில் பறந்து அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மீண்டும் முகத்துவாரம் ஆற்றில் படர்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றிலிருந்து எடுக்கப்படும் சாம்பல் சகதிகளை கரையோரம் கொட்டாமல் பாதிப்பில்லாத பகுதிக்கு குழாய் மூலம் எடுத்து சென்று கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘அலையாத்தி காடுகளை பாதுகாக்க புதியதாக அலையாத்தி செடிகளும் மரக்கன்றுகளும் கரையோரத்தில் நடப்பட்டன. ஆனால் தற்போது கொசஸ்தலை ஆற்றில் இருந்து அப்புறப்படுத்தும் சாம்பல் கழிவுகளை அலையாத்தி செடிகளுக்கு அருகிலேயே மலைபோல் குவித்து வைப்பதால் ஏற்கனவே உள்ள அலையாத்தி காடுகளும், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக நடப்பட்ட அலையாத்தி செடிகள் மற்றும் மரக்கன்றுகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் இதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
The post எண்ணூர் முகத்துவாரம் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் குவிக்கப்படும் சாம்பல் கழிவு: அலையாத்தி காடுகள் பாதிக்கப்படும் அபாயம் appeared first on Dinakaran.