சுற்றுலா என்ற சொல்லை கேட்டவுடன் 80சதவீத மனங்களில் ஒரு புத்துணர்ச்சி என்பது இயல்பாகவே வந்து விடும். இந்த சுற்றுலா என்பது நகரம், மாவட்டம், மாநிலம் தாண்டி, தேசம் கடக்கும் சுற்றுலாவாகவும் உருவெடுத்துள்ளது. இந்த வகையில், சுற்றுலா என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் பெரும் வருமானத்தையும் ஈட்டித்தருகிறது.
இதன்படி சுற்றுலாவில் அதிக வருவாய் ஈட்டும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் 2வது இடத்திலும், பிரான்ஸ் 3வது இடத்திலும், தாய்லாந்து 4வது இடத்திலும், லண்டன் 5வது இடத்திலும், இந்தியா 6வது இடத்திலும் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகளாவிய மக்களில் 93 சதவீதம் பேர் சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர். வாழ்க்கைச்சூழல், பொருளாதாரம், சமூக காரணங்களால் 40சதவீதம் பேருக்கு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. ஆனாலும், அவர்களிடம் சுற்றுலா செல்லவேண்டும் என்ற ஆசை எப்ேபாதும் மேலோங்கி நிற்கிறது என்பது சுற்றுலா ஆர்வம் குறித்து சர்வதேச ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல். உலக சுற்றுலா ஆர்வலர்களின் இதயத்தில் பதிந்த பல்வேறு இடங்கள் இந்தியாவில் உள்ளது. இதனால் சுற்றுலா என்ற தளத்தில், இந்தியாவிற்கு எப்ேபாதும் பிரதான பங்கு உள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் முக்கியத்துவம் காரணமாக, இந்தியாவில் ஆண்டு ேதாறும் ஜனவரி 25ம்தேதி (நேற்று) தேசிய சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டிற்கான பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறது. இன்ப பொழுது போக்குடன் சுற்றுலா செல்வது ஒரு கலை. கிணற்று தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போதும் இன்பம் தராது. பல்வேறு புதிய இடங்களுக்கு செல்வதும், பலதரப்பட்ட மக்களை காண்பதும் நம் உணர்வுக்கு மட்டுமல்லாது, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். புதிய, புதிய அனுபவங்களை பெறுவது தான் மனித பிறப்பின் மகத்துவம்.
அறிவியல் வளர்ச்சி காரணமாக, இன்றைய உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இது பல இடங்களில் பலம் தான் என்றாலும், பாடம் கற்கவேண்டிய மனிதனுக்கு தடைக்கல்லாக இருக்கிறது. இயற்கையின் படைப்பில் இருக்கும் அழகுகள், உயிரினங்கள் என்று எண்ணற்றவை நமது கண்ணையும், கருத்தையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. பாய்ந்து செல்லும் ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், விண்ணை முட்டும் மலைகள், மண்ணின் வளங்கள் என்று ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. அதேநேரத்தில் நாடுகளை பொறுத்தவரை மொழி, பண்பாடு, கலாச்சாரத்தில் வித்தியாசம் கொண்டவை.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மனிதப்பண்பு. இதற்கான வாய்ப்பு சுற்றுலாவால் மட்டுமே பெருமளவில் உருவாகும் என்றால் அது மிகையல்ல. இவை அனைத்திற்கும் மேலாக மனஅழுத்தம் போக்கும் சிறந்த மருந்துகளில் ஒன்று சுற்றுலா என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்து உளவியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: இயந்திரமயமான இன்றைய வாழ்க்கை சூழலில் ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்களும், கேட்காதவர்களும் இருக்கவே முடியாது.
கவலை, காயம், விபத்து, நோய் அல்லது குடும்ப, சமூக கஷ்டங்கள் மனிதர்களுக்கு டென்ஷன் என்னும் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த மனஅழுத்தம் என்பது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். இந்த மனஅழுத்தம் என்பது, சமீபகாலமாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்த மனஅழுத்தத்திற்கு பல்வேறு வழிகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் விட சிறந்த மருந்து சுற்றுலா. மாறுபட்ட சூழ்நிலை, வேறுமனிதர்கள், புதுப்புது இடங்கள், வித்தியாசமான உணவு வகைகள், மனிதர்களின் எண்ணஅலைகளை வேறு திசைக்கு மாற்றும்.
அப்போது உடலும், மனமும் தானாகவே புத்துணர்ச்சி பெறும். சில நாட்கள் அந்த இடத்திலேயே தங்கும் போது, மனஅழுத்தம் என்பது முற்றிலுமே மறைந்து போய்விடும். அதே நேரத்தில் மனஅழுத்தத்தில் இருக்கும் போது பயணத்திற்கான திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். எந்த இடத்தில் செல்ல ேவண்டும்? எங்கு தங்க வேண்டும்? என்ன உணவை சாப்பிட வேண்டும்? என்பதில் தெளிவு வேண்டும். சுற்றுலா செல்லும் நேரத்தில் போதிய தூக்கம், சீரான உடற்பயிற்சி போன்றவற்றையும் கடைபிடித்தால், மனதின் அழுத்தம் மேலும் இலகுவாகி விடும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
*பொருளாதாரத்தில் 7.5சதவீத பங்களிப்பு
இந்தியாவில் சுற்றுலாவின் வளர்ச்சி என்பது, 1950ம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை மாறியது. இது நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் 7.5சதவீதம் என்ற ரீதியில் உள்ளது. இதேபோல் வருவாய் ஈட்டுவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதற்கும் முக்கிய மையமாக சுற்றுலாத்துறை உருவெடுத்துள்ளது.
உள்ளூர் சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்தந்த பகுதி கைவினைஞர்கள், கலைப்பொருட்கள் தயாரிப்பாளர்கள், கலாச்சாரம் சார்ந்த ஆடை வடிவமைப்பாளர்களின் திறமைகளையும், அடுத்தடுத்த நிலைக்கு சுற்றுலா மையங்கள் கொண்டு செல்கிறது என்பதும் ஆய்வாளர்களின் பெருமிதம்.
The post எண்ணஅலைகளை வேறு திசைக்கு மாற்றிவிடும் டென்ஷனுக்கு தீர்வு தரும் ஒரு அரிய மருந்து சுற்றுலா appeared first on Dinakaran.