கோவில்பட்டி: எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை மாலை இடிந்து விழுந்தது.
எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இந்த இல்லம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மகாதேவி என்பவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் அதிகமாக வருவது வழக்கம். மற்ற நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பாரதியார் நினைவு இல்லத்தை பார்வையிட வருவார்கள்.