எடப்பாடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ₹10 லட்சம் பெற்றுக் கொண்டு அதிமுக நகரச்செயலாளர் பதவி: போஸ்டர்களால் பரபரப்பு

3 months ago 23

அருப்புக்கோட்டை: ₹10 லட்சம் வாங்கி கொண்டு அதிமுகவில் நகரச் செயலாளர் பதவி வழங்கியதாக அருப்புக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர அதிமுக செயலாளர் சக்திவேல் பாண்டியன். இவர் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக சோலை சேதுபதி, அதிமுக நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சக்திவேல் பாண்டியனின் ஆதரவாளர்கள், 25வது வார்டு அதிமுக மற்றும் அனைத்து முக்குலத்தோர் நல கூட்டமைப்பு சார்பில், அருப்புக்கோட்டை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘‘அதிமுகவில் நகரச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்ய ₹10 லட்சமா? சாதி, மதம் பார்க்காமல் உண்மை விசுவாசியாக செயல்பட்ட சக்திவேல் பாண்டியனின் பொறுப்பை மாற்றியதை எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சக்திவேல் பாண்டியனின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘சோலை சேதுபதி ராமநாதபுரம் மாவட்டம், ராமசாமிபட்டியை சேர்ந்தவர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ₹10 லட்சம் வாங்கிக் கொண்டு பரிந்துரை செய்ததின் பேரில் கட்சி தலைமை அவரை நகரச் செயலாளராக நியமித்துள்ளது’’ என்றனர்.

‘பணம் கொடுத்தால் பதவி என்ற பேச்சுக்கு இடமில்லை’
சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் பணம் கொடுத்தால் தான், நகர செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் நேரத்தில் முடங்கி கிடப்பவர்களுக்கு பதவி வழங்கப்படாது. தலைமை அறிவிக்கின்ற வேட்பாளர்களுக்கு உழைத்தவர்கள், வாக்குகளை சேகரிப்பவர்களுக்கு அதிமுகவில் எப்போதும் முன்னுரிமை உண்டு என்றார்.

The post எடப்பாடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ₹10 லட்சம் பெற்றுக் கொண்டு அதிமுக நகரச்செயலாளர் பதவி: போஸ்டர்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article