
தஞ்சாவூா்,
தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
சட்டம் ஒழுங்கும் தமிழகத்திலே படிப்படியாக கடைசி புள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலே திருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது.முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்
.தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.அரசினுடைய தவறுகளை, விரோத போக்கை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். வருகின்ற தேர்தலிலே ஆட்சி மாற்றத்தின் அடிப்படையிலே பாடம் புகட்டுவார்கள் என்பதிலே மாற்று கருத்து இருக்க முடியாது.இன்றைக்கு அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க., த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது
.நாளை முதல் கோவை மண்டலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.