
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்திய சென்னையில் பிரசாரம் செய்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக தயாநிதிமாறன் எம்.பி., செலவிடவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு கடும் எதிப்பு தெரிவித்த தயாநிதி மாறன், தன்னை பற்றி தொகுதியில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாநிதி மாறன் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, ஏற்கனவே வழக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.