எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

3 months ago 10

சென்னை: அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதாவும், இபிஎஸ்-ம் தான் காரணம், ஆனால் இதற்கு அரசியல் வண்ணம் கொடுக்க விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, அதிமுக ஏற்பாடு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பதிலளித்தார்.

கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த சூழலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.

விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் விழாவினை புறக்கணித்ததாக செங்கோட்டையன் குற்றம்சாட்டிய நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது.

அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை. இதை அ.தி.மு.க. ஏற்பாடு செய்யவில்லை. விழாவை அதிமுக நடத்தி இருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்திருப்போம். பாராட்டு விழா நடத்திய கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி விவசாயிகளும் உள்ளனர். அதற்கு அரசியல் வண்ணம் கொடுக்க விரும்பவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article