
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியின் போது நாங்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். முக்கியமான நேரங்களில் கேட்சை தவறவிட்டால் அதற்காக கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். நாங்கள் இந்த போட்டியில் சரியான இடத்தில் பந்துவீச வில்லை என்று நினைக்கிறேன் அதுவே தோல்விக்கு காரணம்.
எங்கள் பிளே-ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் மிடில் ஆர்டர் அழுத்தத்தை சந்தித்தது. மிடில் ஆர்டரில் எங்களாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
எல்லா போட்டியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒவ்வொருவருமே தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும். இந்த போட்டியில் இலக்கு பெரியதாக இருந்ததாலே தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.