சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் ‘முரசொலி’ செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. ‘முரசொலி’ செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திமுகவுக்கே பேரிழப்பு. கலைஞரின் மூத்தப் பிள்ளையான முரசொலியுடனே வளர்ந்தவர்-முரசொலியை வளர்த்தவர். முரசொலி’யில் வந்த செய்திக்காக சட்டமன்றக் கூண்டிலேறி நெஞ்சுரத்துடன் பதில் சொன்ன அவருடைய உறுதிதான் இன்றைக்கு எங்களை எல்லாம் வழி நடத்துகிறது.
இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்ற போது, “40 வருஷம் தலைவர், இளைஞர் அணியை வளர்த்தெடுத்து இருக்காங்க. அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இளைஞர் அணியை நீ வழிநடத்துறது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு உதய். இதை நீ சரியாகப் பயன்படுத்திக் கொள். சென்னையிலேயே இருந்திடாம தமிழ்நாடு முழுக்க பயணம் பண்ணு. இளைஞர்களைச் சந்திச்சு, அவங்கள எல்லாம் நம் இயக்கத்திற்குள் கொண்டு வா,” என்று உரிமையோடு எடுத்துரைத்தார். நான் துணை முதல்வர் பொறுப்பினை ஏற்றபோது, கடந்த செப்டம்பர் 28ம் தேதி இரவு என்னை வாழ்த்திய செல்வம் மாமா, “இந்த வாழ்த்து, நீ துணை முதலமைச்சரானதுக்கு இல்ல. இவ்வளவு நாளா செஞ்சப் பணிகளுக்கானதும் இல்ல. இனிமேல நீ என்ன செய்யப்போறன்னு பார்க்கலாம். அதை மனசுல வச்சு பணியாற்று,” என்று உரிமையோடு அவர் சொன்னதுதான், எனக்கான அவருடைய இறுதி அறிவுரை என்பது இப்போதுதான் புரிகிறது.
நல்லது, கெட்டது எல்லாத்துலேயும், இன்னைக்குத் தலைவர் கலைஞர் இல்லையே என்ற குறையை எனக்குப் போக்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரசொலி செல்வம்தான், என்று நம்முடைய கழகத்தலைவர், `முரசொலி நினைவலைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் உருக்கத்துடன் கூறினார். எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற `உங்களின் குரல்’ இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம், மாமா!. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா! என்றும் உங்கள் நினைவுகளோடு உதய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எங்களை எல்லாம் தவிக்க விட்டுவிட்டு எங்கே போனீங்க.. உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் அறிக்கை appeared first on Dinakaran.