எங்க காதலுக்கு கண்ணில்லை!

1 week ago 4

நன்றி குங்குமம் தோழி

கண்ணன் கண்மணி

காதலை கண்களால் கடத்துவதால்தான், அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் என்று வர்ணித்தான் கம்பன். ஆனால், ‘கம்பன் ஏமாந்தான்…’ எனத் தங்கள் காதலை குரலின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள், பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளான கண்ணன்-கண்மணி காதல் இணையர். அவர்களைச் சந்தித்து பேசியதில்…

‘‘தூத்துக்குடி பக்கம் விளாத்திகுளம்தான் எனக்கு ஊர். வீட்டில் அம்மா, அப்பா, நான், அப்புறம் தங்கை. வீட்டுக்கு நான் ஒரே பையன். +1 படிக்கும் வரை நானும் நார்மல்தான். சைக்கிளில்தான் பள்ளிக்கூடம் போவேன். ஒருநாள் மாலை வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி, டிஃபன் பாக்ஸை அம்மாவிடம் கொடுக்க, “மணி என்னடா என அம்மா கேட்டார்.” வீட்டுக்குள் இருந்த கடிகாரத்தை திரும்பிப் பார்த்து “6.10ம்மா” என்றேன். அதுதான் கடைசியாக நான் பார்த்த நேரம். அதற்குப் பிறகு இந்த உலகமே எனக்கு இருட்டாயிறுச்சு’’ என பேச ஆரம்பித்த கண்ணன், தனது 16 வயதில் திடீரென பார்வையை பறிகொடுத்திருக்கிறார்.

‘‘அந்த நொடி எனக்கு ஏற்பட்டது மயக்கமா? இல்ல சாகப் போறேனா? ஒன்னுமே புரியல. உலகம் எனக்கு அப்படியே நின்னு போச்சு. எனக்கு சுத்தமா கண்ணு தெரியல. ஒரே இருட்டா இருக்குன்னு கதறுறேன். வீட்டுலையும் அழுகுறாங்க. திடீர்னு ஏன் பார்வை போச்சு? என்கிற காரணம் தெரியாமலே தவிச்சேன். நான் பார்த்த உலகம் திடீர்னு இருட்டாகிறுச்சுன்னு, மருத்துவர்களைத் தேடி மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரின்னு அலையுறோம்.

பார்வையைத் திரும்பப்பெற வாய்ப்பில்லைன்னு எல்லோரும் கைய விரிச்சாங்க. ரெட்டினாவுக்கும் மூளைக்கும் போகிற நரம்பு ப்ளாக் ஆயிடுச்சுன்னு காரணம் சொல்லப்பட்டது. சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமா இது நிகழ்ந்திருக்கு. என்னாலதான் அதை உணர முடியாமல் போயிருக்கு. இனி என் வாழ்க்கை அவ்வளவுதான். முடிஞ்சு போச்சுன்னு நினச்சேன். வெளிச்சமா தெரிஞ்ச உலகத்த இருட்டாப் பார்க்க தடுமாறுனேன். ஒரு அடிகூட தனியா எடுத்து வைக்க முடியல. பயப்படுறேன். சாக நினைக்கிறேன். ஆனால் எதுவும் செய்ய முடியல.

இனி இப்படித்தான் வாழ்க்கை என்கிற நிதர்சனம் புரிய ஆரம்பிச்சது.மார்ச் மாதம் கண் பார்வை போனது. ரெகுலர் பள்ளியில் படிக்க முடியாமல், ஜூலை மாதம் மதுரையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் +2 சேர்ந்தேன். பார்வை இருந்த போது நான் படித்தது கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல். இனி இவற்றை படிக்க முடியாது எனச் சொல்ல அக்கவுன்டன்ஸி, காமர்ஸ் பாடத்தை எடுத்து படித்தேன். ஆனால் எனக்கு அக்கவுன்டன்ஸி குறித்த புரிதலே சுத்தமாக இல்லை. முதல் முயற்சி தோல்வி. இந்த நிலையில் செல்வம் என்கிற மதிப்பிற்குரிய நண்பர் எனக்குக் கிடைக்கிறார். அவரும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிதான்.

பார்வை இழந்தவர்களின் உலகம் இப்படித்தான் இருக்குமென, இருட்டு உலகை எனக்கு அறிமுகப்படுத்தி, அதற்குள் அழைத்துச் சென்று வாழப் பழக்குகிறார். அவரின் அறிவுறுத்தலில் 15 நாளில் ப்ரைல் கற்றுக்கொள்கிறேன். தட்டுத்தடுமாறி பாடங்களைப் படித்து, உதவியாளர் மூலம் தேர்வெழுதி +2 முடிக்கிறேன். பிறகு கல்லூரியில் இணைந்து பி.ஏ., எம்.ஏ. பி.எட். எம்.பில்., பி.எச்டி படிப்புகளைத் தொடர்ந்து படித்து முடிக்கிறேன். அப்போது எனக்கு வயது 27.

17 வயதில், திடீரென பார்வையிழந்த ஒருவனாக நான் பார்வையற்றோர் பள்ளியில் இருந்த போதுதான், என் இணையர் கண்மணியின் குரல், முதன் முதலாக எனது காதில் அழுத்தமாக விழுகிறது. அதுவொரு மறக்க முடியாத சம்பவம். கண்மணி பிறப்பிலே பார்வை இல்லாதவர். அவரும் பள்ளி விடுதியில் தங்கியிருந்தார். எங்களின் குடும்பங்களில் இருந்து, கைச் செலவுக்காக, பொறுப்பாளர் பெயருக்கு பணம் அனுப்புவார்கள்.

எங்கள் இருவரின் பெயரும் கண்ணன், கண்மணி என்பதால், பணத்தை தவறுதலாக மாற்றிக் கொடுத்துவிட்டார் பொறுப்பாளர்.எனக்கு வீட்டில் இருந்து அனுப்பிய தொகை 1800. கண்மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகை 500. கண்மணி பணத்தை வாங்கியதும் எண்ணிப் பார்க்காமல் அப்படியே செல்ல, எனது பணம் குறைவாக இருப்பதை நான் பொறுப்பாளரிடம் சென்று கேட்கிறேன். பணம் மாறிவிட்டதை உணர்ந்தவர், கண்மணியை அழைத்து பணம் குறித்துக் கேட்கிறார். அப்போதுதான் கண்மணி கவனிக்கிறார். ‘தவறான தொகை வழங்கப்பட்டுவிட்டதை நான் கவனிக்கலை சார்.

இந்தாங்க கொடுத்துருங்க’ என வெடுக்கென்று திமிராகச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சட்டென கிளம்பிவிட்டார். கண்மணியின் திமிர் குரல் அந்தநொடி என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. பார்வை இல்லாதவளுக்கு இவ்வளவு திமிரா, ஒரு ஸாரி கூட சொல்லலை என நினைத்துக் கொண்டேன். ஆனால் அந்தத் திமிர் எனக்குப் பிடித்திருந்தது. கல்யாணம் பண்ணுனா இந்த மாதிரி பெண்ணைத்தான் பண்ணணும் என்கிற எண்ணம் வந்தது. இது நடந்தது 2012ம் வருடம். ஓரிரு வாரங்களிலே, தனக்கு சாப்பாடு ஒத்துவரலை என கண்மணி ஊருக்கு கிளம்ப, அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை.

நான் எனது மேல் படிப்பை எல்லாம் முடித்த பிறகு, எனது நண்பன் செல்வமும் நானும் இணைந்து ‘ஒளிரும் பனித்துளி’ என்ற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, வாய்ஸ் ஓவர் கொடுக்க ஆள் தேடிய போது, என் இன்னொரு நண்பர், கைபேசி எண் ஒன்றைக் கொடுத்து, இந்தப் பெண் இதற்கு சரியான நபர். இவரும் பார்வை மாற்றுத்திறனாளிதான் எனச் சொல்கிறார். நானும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேச, பார்வையற்றோர் பள்ளியில் திமிராய் பேசிச் சென்ற பெண்ணின் குரல்தான் இதுவெனப் புரிந்தது.கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே குரலை கேட்கிறேன். இந்தப் பெண்ணையே திருமணம் செய்தால் நல்லா இருக்குமென அப்போதும் நினைக்கிறேன்.

எங்கள் சேனலுக்கான ஸ்க்ரிப்டை அவருக்கு அனுப்பி வைக்க, அதை அவர் குரல் பதிவு செய்து ஆடியோவாக எங்களுக்கு அனுப்பவென, சிறிது காலம் இப்படியே தொடர்கிறது. ஆனால் கண்மணிக்கு என்னைப் பற்றிய நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் கண்மணியிடம் என் காதலை சொல்ல நினைக்கிறேன். ஒருவேளை முடியாதென மறுத்துவிட்டால் என்ன செய்வதென குழப்பமாகவும் இருந்தது.

ஒரு ஜனவரி மாதம் முதல் தேதியில் தைரியத்தை வரவழைத்து, என் காதலை கைபேசியில் நான் வெளிப்படுத்த, நினைத்தமாதிரியே டக்கென தொடர்பைத் துண்டித்தார். விடாமல் தொடர்ந்து அழைத்ததில், அன்றிரவுதான் பேசினார்’’ என்றவரை இடைமறித்து பேச ஆரம்பித்தார் அவரின் காதல் மனைவி கண்மணி.‘‘எனக்குள்ளும் அவர் மீது காதல் இருந்ததுதான். அவர் முதலில் சொல்லட்டுமே எனக் காத்திருந்தேன்’’ எனப் புன்னகைத்தவர், தன் நினைவுகளை மீட்டியபடி மேலே தொடர்ந்தார்.

‘‘எனக்கு ஊர் திருநெல்வேலி. நான் பி.ஏ. பி.எட் முடிச்சுருக்கேன். 8ம் வகுப்புவரை ப்ளைன்ட் ஸ்கூலில் ப்ரைலி முறையில் படித்தேன். 9ல் இருந்து நார்மல் மாணவர்களோடு இணைந்து படித்து, பிறகு கல்லூரியில் சேரத்தான் மதுரை ஐஏபில் தங்கினேன். அப்போதுதான் இந்த பணப் பிரச்னை வந்து, அதில் ஏற்பட்ட மனவருத்தத்தில், என் கோபக்குரல் கண்ணன் மனதில் பதிந்திருக்கிறது’’ என மீண்டும் புன்னகைத்தவர், ‘‘காதலை நாங்கள் வெளிப்படுத்திய பிறகே நேரில் சந்தித்தோம். நிறைய நிறைய பகிர்ந்து கொண்டோம். இருவரின் வீட்டுக்கும் தெரியாமலே, நண்பர்களின் ஒத்துழைப்பில், எங்களின் சந்திப்பும், காதலும் தொடர்ந்தது’’ என்றவரை இடைமறித்து மீண்டும் பேசினார் கண்ணன்.

‘‘இந்த நிலையில் என் கண்களில் அழுத்தம் அதிகமாகி, அறுவை சிகிச்சை ஒன்று சென்னையில் நடக்க, எனக்கான செலவு முழுவதையும் கண்மணிதான் ஏற்றார். அப்போது என்னைப் பார்க்க சென்னைக்கு அவர் வர, எங்களின் நடவடிக்கை அம்மாவிற்கு சந்தேகத்தை எழுப்பியது. எனது விருப்பத்தை நான் அம்மாவிடம் தெரிவிக்கிறேன். “உனக்கும் கண் தெரியாது. அவளுக்கும் கண் தெரியாது. நாளை உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் அப்படியே பிறந்துவிட்டால் என்ன செய்வது” என அம்மா கேட்டார்.

எங்களைப்போல் எத்தனையோ தம்பதிகள், திருமணம் செய்து குழந்தை பெற்று சந்தோஷமாய் வாழ்கின்றனர் எனச் சொன்னாலும் அம்மாவுக்குப் புரியவில்லை. கண்மூடித்தனமாக எதிர்த்தார். திருமணம் நடந்தால், கண்டிப்பாக அம்மா ஆதரவு தரமாட்டார் என்ற நிலையில், திருமணத்திற்குப் பிறகான வாழ்வை இருவருமாகத்தான் எதிர்கொள்ளணும் என்கிற யதார்த்தத்தை கண்மணியிடம் பேசினேன். பிறகு இருவருமே காதலில் உறுதியாக நின்றோம். கண்மணி வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பில்லை’’ என்ற கண்ணனைத் தொடர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தார் கண்மணி.

‘‘எங்களுடையது இன்டர் ரிலீஜியன் திருமணம். நான் கிறிஸ்டியன். அவர் இந்து. என்றாலும் என் வீட்டில் பெற்றோர் உள்பட உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் சம்மதம். கண்ணன் வீட்டிலும் அம்மா தவிர அப்பா, தங்கைக்கு சம்மதமே. என் குடும்ப உறுப்பினர்கள், கண்ணனின் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் எளிமையாக நடக்க, திருமணத்தை பதிவு செய்தோம்.
சென்னையில் அவர் பணியாற்றிய நிறுவனத்திலேயே எனக்கும் வேலை கொடுத்தார்கள். வீடு பார்த்து தனிக்குடித்தனம் சென்றோம். இருவருமே வீட்டு நிர்வாகம் தொடர்பாக முறையான பயிற்சி எடுத்தவர்கள். சுருக்கமாய் சொன்னால் பார்வை இல்லாதவர்கள், எப்படி வீட்டை பராமரிப்பது, சமையல் செய்வது என்கிற மாதிரியான 6 மாதப் பயிற்சி அது.

ரீசென்ட்லி ப்ளைன்டாக இருப்பதுதான் கடினமே தவிர, பார்ன் பிளைன்ட் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரே மாதிரிதான். ஸ்கூல் போகிறவரைதான் எதுவும் புரியாது. பள்ளிக்கு சென்று, மொபைலிட்டி தெரிந்தபின் வாழ்வது சுலபம். இதில் கண்ணணுக்கு இரண்டு அனுபவமுமே இருக்கு. நான் கண்ணணுக்கு ஓ.கே சொல்ல இதுவும் ஒரு காரணம். மொபைல் பயன்பாடு, சிஸ்டம் என எல்லாத்துக்கும் வாய்ஸ் சப்போர்ட் கொடுக்கிற சாஃப்ட்வேர் இருப்பதால், எங்களாலும் இயல்பாக வேலை செய்ய முடியும்.

இரண்டு ஆண்டுகள் சென்னையில் வசித்த நிலையில், பெருநகரத்தின் பொருளாதார நெருக்கடியில் சிக்கினோம். கோவையில் இருந்த எங்களின் நண்பர்கள் சிலர், அங்கு வாடகை குறைவு எனவும், பூஜை சாமான் தயாரிப்புத் தொழிலில் வருமானம் வருவதாகவும் தெரிவித்தனர். அவர்களின் வழிகாட்டலில் கோவைக்கு எங்கள் வாழ்க்கையை மாற்றினோம். இன்று பூஜை பொருள் தயாரிப்புத் தொழிலில் தேவையான வருமானத்தை சம்பாதிக்கிறோம்.

எனக்கு அவரும் அவருக்கு நானுமாக… ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கோம். வாழ்க்கை அழகா, சந்தோஷமா போகுது. சோஷியல் மீடியாவிலும் நாங்கள் இருக்கிறோம். ரீல்ஸ் போடுகிறோம்’’ என்று புன்னகைத்தவர்களைத் தொடர்ந்து… “என் கண்மணி உன் காதலி” என்ற பாடல் காற்றில் கலந்து வர… காதலர் தின வாழ்த்தைச் சொல்லி விடைபெற்றோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: சதீஷ்

 

The post எங்க காதலுக்கு கண்ணில்லை! appeared first on Dinakaran.

Read Entire Article