லிமா,
தென் அமெரிக்க நாடான பெருவில் 2001 முதல் 2006 வரை அதிபராக இருந்தவர் அலெஜான்ட்ரோ டோலிடோ (வயது 78). தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குறிப்பாக இவரது பதவிக்காலத்தில் அண்டை நாடான பிரேசிலை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பிரேசிலைச் சேர்ந்த ஒடேப்ரெச் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் இந்த சாலையை அமைத்தது.
ஆனால் இந்த கட்டுமான பணி ஒப்பந்தத்தை வழங்குவதற்காக ஒடேப்ரெச் நிறுவனத்திடம் இருந்து அவர் சுமார் ரூ.168 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு பெரு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. எனவே இந்த வழக்கில் ஆஜராவதற்காக அமெரிக்காவில் இருந்த அவர் தாயகம் திரும்பினார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்தது. இதில் ஒடேப்ரெச் நிறுவனத்திடம் இருந்து டோலிடோ லஞ்சம் பெற்றது உறுதியானது. எனவே அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ மறுத்துள்ளார்.
முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபர்கள் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி மற்றும் ஒல்லான்டா ஹுமாலா ஆகியோரும் இதே வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.