டாக்கா: ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார். வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் கலிதா ஜியா (79). இவரது ஆட்சி காலத்தில் அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் கலிதா ஜியா, தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிக பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை ஐகோர்ட் விசாரித்து, கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
The post ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமர் கலிதா ஜியா விடுதலை appeared first on Dinakaran.