மதுரை: ‘சிபிஐ மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்’ என ஐகோர்ட் கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு கடன் வழங்கி ரூ.2 கோடி வரை மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வங்கி தலைமை மேலாளர் பாலசுப்ரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அதிமுக மாஜி அமைச்சர் அம்மமுத்து உள்ளிட்ட 8 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 8 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம் என, சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர். ஏனென்றால் சிபிஐ எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொதுமக்கள் நம்புகின்றனர். ஆனால், சிபிஐ விசாரணையிலும் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்து விட்டு, சில நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நிதி, பணமோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் அந்தத் தொகையை திருப்பி செலுத்தினாலும், அவர்களை சாட்சிகளாக சிபிஐ சேர்த்து விடுகின்றனர். சிபிஐ மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன், காரணமாக சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சிபிஐ விசாரணை அமைப்பானது யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கிறதா? சிபிஐ, பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு இந்த நீதிமன்றம் சில பரிந்துரைகளை செய்ய விரும்புகிறது.
வழக்குகளில் குற்றவாளிகள் பெயர் சேர்ப்பது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என அனைத்தையும் சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும். மேலும், அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் சிபிஐ விசாரணை அதிகாரிகள், தேவையான அனைத்து அறிவியல்பூர்வமான தொழில்நுட்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, 8 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.
* சிபிஐ எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொதுமக்கள் நம்புகின்றனர். ஆனால், சிபிஐ விசாரணையிலும் தவறு இருப்பது தெரிகிறது.சிபிஐ விசாரணை அமைப்பானது யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கிறதா?
The post ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன சிபிஐ விசாரணை அமைப்பு மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: ஐகோர்ட் கிளை கடும் அதிருப்தி appeared first on Dinakaran.