ஊழல் குற்றச்சாட்டு.. நீண்ட மவுனத்தை கலைத்து அதானி க்ரீன் எனர்ஜி ஒப்புதல்: FCPA விதிமீறல் குற்றச்சாட்டு இல்லை என விளக்கம்!!

2 hours ago 1

டெல்லி: கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்கா அவை குற்றச்சதி, பங்கு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முதன் முறையாக ஒப்பு கொண்டுள்ளது. அதே நேரத்தில் FCPA நடைமுறை சட்டத்தை மீறியதாக அதானி மீது குற்றச்சாட்டு இல்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2021ம் ஆண்டு சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 2,200 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டதாக அதானி குழும தலைவர் கவுதம் அதானி, அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாகர் அதானி, முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை மறைத்து FCPA எனப்படும் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை மீறி அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் அதானி க்ரீன் எனர்ஜி நிதி திரட்ட முயன்றதாக அதில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை கென்யா ரத்து செய்துவிட்டது. மேலும், பல நாடுகள் அதானி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த அதானி தரப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் குற்றவியல் வழக்கு விசாரணை குறித்து இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விளக்க கடிதம் எழுதியுள்ளது. அதில் அமெரிக்காவின் FCPA விதிகளை மீறியதாக அதானி க்ரீன் எனர்ஜி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது 3 கிரிமினல் சட்டப்பிரிவு கீழ் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 3பேர் மீதும் சந்தேகத்திற்கு இடமான சதிச்செயல், நிதி மோசடி, பங்கு பத்திர மோசடி ஆகிய குற்றவியல் பிரிவுகளின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஊழல் குற்றச்சாட்டு.. நீண்ட மவுனத்தை கலைத்து அதானி க்ரீன் எனர்ஜி ஒப்புதல்: FCPA விதிமீறல் குற்றச்சாட்டு இல்லை என விளக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article