ஊரெங்கும் வேர்க்கடலை!

4 weeks ago 8

“நெல், கம்பு, வேர்க்கடலை… இது மூன்றும்தான் எங்கள் ஊரின் பிரதான விவசாயப் பயிர்கள். ஏரியை ஒட்டி அமைந்துள்ள எங்கள் நிலத்தில் நெல்லும், வேர்க்கடலையும் சிறப்பாக பலன் தரும்’’ என பேசத் தொடங்கினார் திருவள்ளூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர். சுமார் 300 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் ஏறத்தாழ அனைவருக்கும் விவசாய நிலம் இருக்கிறது. இதனால் அத்தனை குடும்பங்களும் விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கின்றன. ஊரையும், வயல்வெளிகளையும் சுற்றிக் காண்பித்தவாறு மேலும் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பாஸ்கர்.“நாங்கள் ஏரிநீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்கிறோம். தரைக்கிணறோ, ஆழ்குழாய்க் கிணறோ எங்கள் ஊரில் கிடையாது. இதனால் எங்கள் கிராமத்தில் இருக்கும் ஏரியை ஒட்டி அமைந்துள்ள முதல் 100 ஏக்கரில் நெல் விவசாயமும், அதற்கடுத்த நிலப்பரப்பில் வேர்க்கடலை விவசாயமும் நடக்கும். அதன்படி தற்போது எங்கள் கிராமத்தில் மொத்தமாக 300 ஏக்கரில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் 20 நாட்களில் நிலக்கடலையை அறுவடை செய்யத் தொடங்குவோம்.

நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். தாத்தா, அப்பா காலத்தில் எல்லாம் பல வகையான நெல் சாகுபடி நடந்தது. அப்போதிருந்தே விவசாய வேலை செய்து பழகிய நான் சரியாக எனது 22 வயதில் இருந்து முழு நேர விவசாயியாக மாறினேன். 30 வருடங்களாக விவசாயம்தான் எனக்கு எல்லாம். எங்களுக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஏரியை ஒட்டிய முதல் 2 ஏக்கரில் கடந்த மாதம்தான் நெல் பயிரிட்டு அறுவடை செய்தேன். மீதமிருக்கிற 5 ஏக்கரில் தற்போது வேர்க்கடலை சாகுபடி செய்திருக்கிறேன்.கம்பு பயிரிட்ட நிலத்தில்தான் தற்போது வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறேன். கம்பு அறுவடை முடிந்தபிறகு செடிகளை அதே நிலத்தில் மடக்கி உழுது விடுவேன். அதன்பின் அந்த நிலத்தில் சணப்பை விதைத்து அதையும் மடக்கி உழுது நிலத்திற்கு தேவையான தழைச்சத்தை உற்பத்தி செய்வேன். வேர்க்கடலையை சாகுபடி செய்ய நிலம் நன்கு உதிரியாக இருக்க வேண்டும். இதற்காக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக வரும் வரை நன்றாக உழுவேன். அதன்பின் வேர்க்கடலையை விதைக்கத் தொடங்குவேன். எங்கள் பகுதியில் உள்ள மண் ரகத்திற்கு சிவப்பு நிற நாட்டு ரகக் கடலைதான் நன்றாக மகசூல் கொடுக்கும் என்பதால் அந்த விதைகளைத்தான் வாங்கி விதைப்பேன்.

இந்த ரக விதையை நிலத்தில் விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 60 கிலோ வரை தேவைப்படும். அதேபோல, எங்கள் பகுதியில் வேர்க்கடலையைக் காய்ச்சலும் பாய்ச்சலுமான முறையில்தான் சாகுபடி செய்வோம். 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகிற வேர்க்கடலைக்கு மொத்தமாகவே இரண்டு முறைதான் நீர் பாய்ச்சுவோம். விதை விதைத்த ஐந்தாவது நாள் விதை முளைத்து வெளியே வளரத் தொடங்கும். அடுத்த ஒரு வாரத்தில் செடியாகும் அளவிற்கு வளர்ந்துவிடும். சரியாக 25வது நாளில் ஒரு களை எடுப்போம். அதன்பின் 60வது நாளில் இரண்டாவது களை எடுப்போம். முதல் களை எடுத்த பிறகு முதல் நீர் பாய்ச்சுவேன். அதேபோல் 60வது நாளில் இரண்டாவது நீர் கொடுப்பேன். அதன்பிறகு அறுவடையின்போது மட்டும் மூன்றாவது நீர் கொடுத்து அறுவடை செய்ய வேண்டும்.

நெல், கடலை, கம்பு ஆகிய மூன்று பயிர்களையும் நான் இயற்கை முறையிலேயே சாகுபடி செய்கிறேன். இந்த இயற்கை முறை விவசாயத்தை கடந்த 10 ஆண்டுகளாக கடைப்பிடிக்கிறேன். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்திலைக் கரைசல் போன்ற கரைசல்களைத்தான் பயிர்களுக்கு பயன்படுத்துகிறேன். அதேபோல வேளாண் அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் ஆர்கானிக் பயோ லிக்யூடை பயன்படுத்துகிறேன். இந்த முறையில் நான் விவசாயம் செய்யும்போது கடலையில் இருந்து 5 ஏக்கருக்கு சராசரியாக 40 கிலோ எடைகொண்ட 100 மூட்டைகள் வரை அறுவடையாக கிடைக்கிறது. அதேபோல, நெல் விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு 22 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு :
பாஸ்கர்: 94439 90596.

* வேர்க்கடலையை விதைத்து அறுவடை செய்வது வரை சராசரியாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகிறது. அந்த வகையில் 5 ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. தற்போது ஒரு மூட்டை வேர்க்கடலை ரூ.2700 வரை விற்பனை ஆகிறது. கடந்த வருடம் 5 ஏக்கரில் 100 மூட்டை அறுவடை கிடைத்தது. இந்த வருடமும் அதே விளைச்சல் கிடைக்கும் பட்சத்தில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஊரெங்கும் வேர்க்கடலை! appeared first on Dinakaran.

Read Entire Article