கும்ப ராசியின் அதிபதி சனி. நவீன ஜோதிடத்தில் யுரேனஸ் என்றும் கூறுவார்கள். இது ஒரு காற்று ராசியாகும். இதன் சின்னம் கும்பம் நிறைய தண்ணீர். தண்ணீர் பானையை சுமந்து போய் மற்றவர்களுக்குத் தண்ணீர் வழங்குபவர். இந்தியப் புராணங்களில் சனி பகவான், சூரிய பகவானின் மகன் என்றும், அவன் தன் தந்தைக்கு எதிரானவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. கும்ப ராசிக்கு எதிர் ராசி சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியாகும். கும்பம், அடிப்படையில் நீர் ராசி என்று குறிப்பிட்டாலும்கூட இது ஒரு காற்று ராசியின் செயல்பாடு கொண்டது என்று கருதுகின்றவர்களும் உண்டு.
அமைதியான போராளிகள்
கும்ப ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், அடங்கிப் போக மாட்டார்கள். இவர்களுக்குள் போராட்ட குணமும் முன்னேறும் வெறியும் இருக்கும். ஏதேனும் புதிது புதிதாக செய்து வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தைக் கடந்து, விரைந்து சென்று கொண்டே இருப்பார்கள். வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்ப்பார்கள். திட்டமிடுதலில் மிகவும் நுட்பமாக செயல் படுவார்கள். மற்றவர்கள் வியக்கும் வகையில் இவர்களின் திட்டங்கள் அமைந்திருக்கும்.
குடத்திலிட்ட விளக்கு
கும்ப ராசிக்காரர்கள் எல்லாரோடும் சகஜமாக பழகும் குணம் உடையவர்கள். அறிவுக் கூர்மையும் நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பெற்றவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஆனால், வெளியே வெளிச்சத்துக்கு வரத் தயங்குவார்கள். குடத்தில் இட்ட விளக்கு போல் இருப்பார்கள்.
நிறுவனத்தின் அச்சாணி
நல்ல முதலாளிகளுக்கு ஒரு திறமையான கும்ப ராசிக்காரர் செயலாளராக, மேலாளராக அமைந்திருப்பார். பேர் புகழ் எல்லாம் முதலாளிக்குப் போகும். ஆனால், அந்த நிறுவனத்தின் அச்சாணியாக கும்பராசிக்காரர் இருப்பார்.
குழுப் பணி ஆர்வலர்
பொது நன்மைக்காகக் குழுவாக இணைந்து செயல்பட்டு அல்லது ஒரு குழுவினரைக் கொண்டு செயல்படச் செய்து புதுமைகளையும் லாபத்தையும் மாற்றத்தையும் விரைவில் கொண்டு வருவதில் கெட்டிக் காரர்கள். டீம் ஸ்பீரிட் உடையவர். இவர்களுக்குப் புதிய புதிய யோசனைகள் விரைவாகத் தோன்றும். அதனை உடனுக்குடன் செயல்படுத்துவதிலும் திறமை இருக்கும். நீண்ட கால லாபம் தரும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவர்.
தன்னலம் கலந்த பொது நலம்
தன்னலமற்றவர் போல தோன்றினாலும், ஒவ்வொரு காய் நகர்த்தும்போதும் இதில் தனக்கென்ன லாபம் என்பதை மனதில் கணித்தபடியேதான் அடுத்தடுத்த நகர்வை மேற்கொள்வர். பேர் புகழுக்கு இவர்கள் ஆசைப்படாதவர் என்பதால், அடக்கமானவர், அமைதியானவர், அன்பானவர் என்ற பெயரை எளிதில் பெற்றுவிடுவார்கள்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களைக் கேலி கிண்டல் செய்வது, புறம் பேசுவது போன்ற வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். இது இவர்களின் நேரத்தை வீணடித்துவிடும் என்பதால் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மட்டுமே அடுத்தவர்களை பற்றி தங்கள் கருத்தைச் சொல்வார்கள்.
உரையாடலில் விருப்பம்
கும்ப ராசிக்காரர் அமைதியாகத் தலையை மட்டும் அசைத்துக் கொண்டு, ஒருவர் பேச்சைக் கேட்கிறார் என்றால், அந்தப் பேச்சில் அவருக்கு ஆர்வம் இல்லை என்பதுதான் அர்த்தம். அவருக்கு ஈடுபாடு இருந்தால் உடனடியாக அவர் பதில் பேசி சுவையான உரையாடலாக மாற்றி இருப்பார். அவருடைய மௌனம் அவரது ஆர்வமின்மையை எடுத்துக்காட்டும்.
எளிமையில் கவர்ச்சி
கும்ப ராசிக்காரர்கள், அழகுணர்ச்சி மிக்கவர்கள். எளிமையாகத் தோற்றமளித்தாலும், உடை உடுத்துவதிலும் நகை அணிவதிலும் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வர். எளிமையாகத் தோன்றுவதற்கே இவர் மிகவும் சிரத்தை எடுத்து ஆடை அணிமணிகளை தேர்வுசெய்து அணிவார். ஆடம்பரமாகத் தோன்றுவதில் விருப்பமில்லாதவர்.
நடையில் தடுமாற்றம்
கும்ப ராசிக்குரிய உடல் உறுப்பு கணுக்கால் ஆகும். வயோதிகத்தில் இவர்களில் பலருக்கு கணுக்கால் வலிமை குறைந்து நிற்பதில் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படும். இவர்கள் தனிமையை விரும்புவதில்லை.
தனிமையில் அச்சம்
தனிமை இவர்களுக்கு துயரத்தையும் அச்சத்தையும் தரும். எனவே எப்போதும் குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர்களுடன் பணியாளர்களுடன் முதலாளிகளுடன் சேர்ந்தே இருப்பார்கள். சனி ராசியான மகரம் தனித்திருக்க விரும்பும். தனிமையை நாடும். அதே சனி ராசியான கும்பம் தனித்திருக்க அஞ்சும்.
சமத்துவ நோக்கு
கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் நன்கு பழகக்கூடியவர். ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவர். எந்த ராசிக் காரரோடும் அனுசரித்துச் செல்லக் கூடியவர்கள். இவர்களுக்கு யார் மீதும் பகை உணர்ச்சி இருக்காது. சிலர் மீது வன்மமோ வெறுப்போ இருந்தால்கூட அதை கோரமாக வெளிப்படுத்த மாட்டார்கள். விலகிச் செல்வர் அல்லது மனதுக்குள் வெறுத்தாலும் நேரில் நல்ல விதமாகப் பழகுவர். தனக்குப் பிடிக்காதவரை பற்றி புறம் பேசுவதோ, ஜாடை பேசுவதோ சண்டையிடுவதோ வசைபாடுவதோ மொட்டகடுதாசி எழுதிப் போடுவதோ கிடையாது.
பொருத்தமும் இணக்கமும்
கும்பராசியினர் அனைத்து ராசியினருடனும் பொருந்தி செல்லக் கூடியவர்கள் என்றாலும், கும்பராசிக்கு இணக்கமான ராசிகள் என்றால் நெருப்பு ராசிகளையும் காற்று ராசிகளையும் குறிப்பிடலாம். மேஷம், சிம்மம், தனுசு போன்ற நெருப்பு ராசியினரின் அச்சம் இல்லாத அதிகார குணம் இவர்களை எந்த வகையிலும் பாதிக்காது. அவர்களோடு இணங்கி செல்ல இவர்களால் முடியும். அதுபோல, புத்திசாலித்தனம் நிறைந்த மிதுனம் மற்றும் துலாம் ராசியோடும், இவர்கள்கனிவோடும் பணிவோடும் பழகிக் கொள்ள இயலும்.
தீர்க்கதரிசிகள்
கும்ப ராசியினர் தனக்கு எவ்வித துன்பமும் தொந்தரவும் வரக்கூடாது, எந்த ரிஸ்க்கிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. புகழ்ச்சியும் வேண்டாம், இகழ்ச்சியும் வேண்டாம் என்று இவர்கள் கருதுவதனால், பெரிய அளவில் சிந்தித்து அமைதியாக நிதானமாக செயல்படுவார்கள். இவர்கள் செய்யும் சில காரியங்களைப் பார்க்கும் போது, தேவையற்ற வேலை என்று மற்றவர்கள் விமர்சிக்கக்கூடும். ஆனால், அதன் முடிவு தெரிந்ததும் இவர்களின் தீர்க்கதரிசனமான செயல்பாடு குறித்து பாராட்டுவர். வருங்காலத்தைப் பற்றி சிறப்பாக கணித்திருக்கிறார்கள் என்று பலரும் பாராட்டுவர். வியந்து நிற்பர். ஊருக்கு உழைக்கும் கும்ப ராசியினர், ஒவ்வொரு வீட்டிலும் நிறுவனத்திலும் இருந்தால் ஒற்றுமையும் செல்வ செழிப்பும் மகிழ்ச்சியும் கிட்டும்.
The post ஊருக்கு உழைக்கும் உத்தம சீலர்கள் கும்ப ராசியினர் appeared first on Dinakaran.