ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மண்டை உடைப்பு

2 weeks ago 2

மரக்காணம், ஜன. 19: மரக்காணம் அருகே கோஷ்டி மோதலில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மண்டை உடைந்தது. மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காளியாங்குப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று அப்பகுதியில் விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்வதில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (55) மற்றும் சூர்யா (27) ஆகிய ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் காளியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்த கருணாகரனின் ஆதரவாளரான இருசப்பனுக்கும் சூர்யாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த சூர்யாவின் உறவினர்களும் இருசப்பன் உறவினர்களும் சம்பவ இடத்தில் ஒன்று திரண்டனர். அப்போது இரு கோஷ்டியினரும் தடி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி சண்டையை மறித்து சமாதானம் பேச சென்றுள்ளார். அப்போது சூர்யாவின் ஆதரவாளர்கள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தியையும் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர். இதனால் கலியமூர்த்தியின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தார். இந்த கோஷ்டி மோதலில் சூர்யா, அவரது தரப்பை சேர்ந்த பிரகாஷ், ஆனந்து, பிரேம் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் கருணாகரன், அவரது தரப்பை சேர்ந்த இருசப்பன், வெங்கட கிருஷ்ணன், ஐயப்பன், ரவி ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீசார் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article