
சென்னை,
2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உரையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தென்னை பரப்பு விரிவாக்கம், ஊடுபயிர் சாகுபடி, மறுநடவு மற்றும் புத்தாக்கம், செயல் விளக்கத்திடல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.35.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.1.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோடைக்காலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,452 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.
பருத்தி உற்பத்தியை அதிகரித்திட பருத்தி உற்பத்தி பெருக்கு திட்டத்துக்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.