ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, முகத்தை மூடிக்கொண்டு, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு, கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, பாலவாக்கம் ஏரிக்கரை பகுதியில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முன்பக்க இரும்பு கிரில் கேட்டின் பூட்டை உடைத்து, முகத்தை துண்டால் மறைத்தபடி ஒரு மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். அவர் கோயிலின் கேட்டை திறந்து உள்ளே சென்றபோது, அவரது காலில் விபூதி பிரசாத தட்டு மிதிபட்டுள்ளது. இதனால், அவர் அத்தட்டை கையில் எடுத்து மேலே வைத்துவிட்டு, அம்மனை பயபக்தியுடன் வணங்கியுள்ளார். பின்னர், கோயிலின் உண்டியலை உடைத்து, அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை மட்டும் எடுத்து, தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார். நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை கோயிலை திறக்க வந்த ஊழியர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, கோயிலில் இருந்த சிசிடிசி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மேற்கண்ட காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளுடன் கோயில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதில் தெளிவாக தெரிந்த உருவத்தை வைத்து அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், கோயிலில் இருந்த மர்ம நபரின் கைரேகைகள் மற்றும் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தும் போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post ஊத்துக்கோட்டை கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு உண்டியலில் கைவைத்த மர்ம நபர்: சிசிடிவி பதிவை வைத்து விசாரணை appeared first on Dinakaran.