ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் மீது சாரைசாரையாக செல்லும் மண் லாரிகளால் கால்வாய் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பஜார் பகுதி காலை, மாலை என இரு வேளையும் நெரிசல் மிகுந்த பகுதியாக பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலம், மதனஞ்சேரி பகுதியில் தனியார் செம்மண் குவாரி கடந்த சில நாட்களாக இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு சென்னை பெரியபாளையம், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை செம்மண் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனால், ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம் மதனஞ்சேரியில் இருந்து மண் ஏற்றிச்செல்லும் லாரிகள், ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோபாயிண்ட் வந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக சாரைசாரையாய் அணிவகுத்துச் செல்கின்றன. இதனால், கால்வாய் சரிந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கிருஷ்ணா கால்வாய் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாய் மீது லாரிகள் செல்வதை தடுத்து நிறுத்தி, தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே மணல் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.