ஊத்துக்கோட்டை அருகே புதர்மண்டிய குடிநீர் குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

1 day ago 1

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளத்தை தூர்வாரி சீரமைத்து, பூங்கா அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, ஊரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு பக்கத்தில் தாமரைக் குளம் உள்ளது.

சுமார் 45 வருடங்களுக்கு முன்பு, இப்பகுதி மக்கள் இதனை குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இக்குளம் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், இக்குளத்தில் அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள இறைச்சி கடைகளின் கழிவுகளும் இக்குளத்தின் அருகில் கொட்டப்படுவதால், இக்குளம் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.

தற்போது, செடிகொடிகள் வளர்ந்து குளமே தூர்ந்துவிட்டதால், இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், குளத்தை சீரமைத்து அதனை சுற்றி பூங்கா அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, கடந்த 2019ம் வருடம் ஜூலை மாதம் பேரூராட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

அதில், குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டுமே கட்டியுள்ளனர். ஆனால் குளத்தை தூர்வாரவில்லை. இதனால், செடிகொடிகள் படர்ந்து குளம் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், ஒரு சிலர் குளத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே, புதர்மண்டி காணப்படும் குளத்தை தூர்வாரி சீரமைத்து, குளத்தை சுற்றிலும் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே புதர்மண்டிய குடிநீர் குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article