நாகர்கோவில்: ஊட்டுவாழ்மடத்தில் சுரங்கப்பாதை இரு பிரிவுகளாக அமைக்கப்படுகிறது. சுரங்கப்பாதை வழியாகவே ரயில் நிலையத்துக்கு செல்ல பாதை வசதி செய்யப்படுகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. 8 மீட்டர் அகலத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் அமைகிறது. நீளம் சுமார் 80 மீட்டர் ஆகும். பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர். குறைந்த பட்சம் 6 மாதங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் பணியை திட்டமிட்டப்படி முடிக்க முடிய வில்லை. இந்தநிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், திடீரென சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைப்பதாக அறிவிப்பு வெளியானது. பணிகள் முடிவடையாத நிலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. சுரங்கப்பாதை திறப்புக்கு நன்றி தெரிவித்து பாரதியஜனதா கட்சியினர் போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டினர். இதற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரைகுறை சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி என கிண்டலாக போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர். ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை பணிக்கான கூடுதல் நிதியை பிரதமர் ஒதுக்கினார். இதற்கான அறிவிப்பை தான் பிரதமர் வெளியிட்டார் என கூறினர். இவ்வாறு பல்வேறு சர்ச்சைகள் எழும்பிய நிலையில், சுரங்கப்பாதை பணி தொடங்கி தற்போது வரை 50 சதவீத பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சுரங்கப்பாதைக்காக தண்டவாளத்தின் மறுபுறம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்தன. ஜேசிபி மூலம் 40 அடி நீளத்துக்கு தோண்டப்பட்டது. நீரூற்று அதிகம் இருந்ததால் தோண்ட, தோண்ட மண் சரிவு இருந்து கொண்டே இருந்தது. இருப்பினும் பல கட்டமாக போராடி சுரங்கம் தோண்டி உள்ளனர். இந்த சுரங்கம் தற்போது இரு வழி பிரிவாக அமைகிறது. ஊட்டுவாழ்மடத்தில் இருந்து சுரங்கப்பாதை வழியாக நேராக வடிவீஸ்வரம் செல்லும் சாலைக்கு வரலாம். சுரங்கப்பாதையில் இடதுபுறம் திரும்பினால், சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செல்லலாம். கார், பஸ்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதையின் இடதுபுறமும் பாதை அமைக்க தோண்டப்படுகிறது.
இந்த பணிக்கான அனுமதியை தான் கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என அதிகாரிகள் கூறினர். கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் இருந்து சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வர பாதை அமைகிறது. இந்த பாதை , ஊட்டுவாழ்மடம் சுரங்கப்பாதையை வந்தடையும். பின்னர் சுரங்கப்பாதை வழியாக ரயில் நிலையத்துக்கு செல்லும் வகையில் இந்த ஏற்பாடுகள் நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
The post ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே சுரங்க பாதை 2 பிரிவுகளாக அமைகிறது: ரயில் நிலையம் செல்ல வசதி appeared first on Dinakaran.