சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,600 கோடி பணத்தை பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் இழந்துள்ளதாகவும், சைபர் மோசடி தலைநகரமாக கம்போடியா நாடு திகழ்வதாகவும் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சைபர் ேமாசடிகளை தடுக்க போலீஸ் கமிஷனர் அருண் அறிவுரைப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் எடுத்து வருகிறது. இருந்தாலும் மோசடி நபர்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற சைபர் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று காலை ஆயிரம் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் சைபர் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்தால், உடனே ‘1930’ என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, போக்குவரத்து தெற்கு இணை கமிஷனர் பண்டிகங்காதர், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் ஆரோக்கியம், கீதாஞ்சலி, வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:
இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரிய குற்றங்கள் என்றால் அது சைபர் குற்றங்கள் தான். கொலையோ, கொள்ளையோ, ஆதாய கொலையோ ஒன்று பெரிய பிரச்னை இல்ைல. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொலை, கொள்ளை எல்லாம் சேர்த்து கூட்டினால் கூட ரூ.50 கோடிக்கு கீழ் இழப்பு இருக்காது. ஆனால் போன ஆண்டு மட்டும் சைபர் குற்றங்கள் மூலம் ரூ.1,600 கோடி பணத்தை தமிழக மக்கள் இழந்து இருக்கிறார்கள். கர்நாடகா மக்கள் ரூ.1,800 கோடி இழந்துள்ளனர், அகில இந்திய அளவில் ரூ.15 ஆயிரம் கோடி வரைக்கும் மக்கள் பணத்தை இழந்து இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இதனால் சைபர் குற்றங்களுடைய தாக்கம் எவ்வளவு என்று தெரியும். இந்த சைபர் குற்றங்களில் யார் ஏமாறுகிறார்கள் என்றால், யார் யார் கையில் மொபைல் போன் இருக்கோ அவர்கள் எல்லோரும் ஏமாற்றப்படுகிறார்கள்.
இன்று பெரிய அளவில் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதற்காகவே வட இந்தியாவில் அதிக ஐடி நிறுவனங்களை மோசடி நபர்கள் வைத்துள்ளனர். ‘நூ’ என்ற ஊரில் தான் நிறையே பேர் இந்த மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல் மதுரா என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்தாரா பகுதியில் லட்சக்கணக்கான குற்றவாளிகள் ஐடி நிறுவனங்கள் போல் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 17ஆயிரம் பேர் சைபர் மோசடி நபர்கள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதற்கு ஒரே தீர்வு 7.5 கோடி மக்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்பை எடுக்காதீர்கள், ஆதார் கார்டு இணைப்பு, மின்சார கட்டணம் என கூறினால் கூட அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சைபர் குற்றங்கள் செய்தால் குறைந்தது ஆயுள் தண்டனை என்ற ஒரு சட்டம் அகில இந்திய அளவில் வந்தால் மட்டுமே இந்த சைபர் குற்றங்களை நாம் கட்டுப்படுத்த முடியும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களிடம் தான் தற்போது பணம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களில் அதிக வருமானம் ஈட்டுவது தமிழ்நாடு மக்கள்மட்டும் தான். ஏன் என்றால், இங்கு தான் பொருளாதாரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் அதிகமாக வளர்ந்துள்ள கேப்பிட்டல் மற்றும் மாநில ஜிடிபி அதிகமாக வளர்ந்து கொண்டு வரும் மாநிலம் தமிழகம் தான். தொழிற்சாலைகள், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு தான் முதன்மையாக உள்ளது.
எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். சைபர் குற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உலகத்திலேயே சைபர் குற்றவாளிகளின் தலைநகரமாக கம்போடியா நாடு விளங்குகிறது. எனவே பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post 2024ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் ரூ.1,600 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர்: சைபர் குற்றவாளிகளின் தலைநகரமாக கம்போடியா விளங்குவதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தகவல் appeared first on Dinakaran.