ஊட்டி நகராட்சி தற்காலிக மார்க்கெட்டில் கூடுதல் கடைகள் கட்டும் பணி தீவிரம்

2 hours ago 2

*அதிகாரிகள் ஆய்வு

ஊட்டி : ஊட்டி நகராட்சி தற்காலிக மார்க்கெட்டில் கூடுதல் கடைகள் கட்டுமான பணிகளை துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுமார் 1700க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இந்த மார்க்கெட் கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

இதனால், இந்த மார்க்கெட்டை மேம்படுத்துவதுடன், பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கடைகள் கட்டும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன் துவக்கியது.

முதற்கட்டமாக காபி அவுஸ் பகுதிக்கு அருகே உள்ள பன்றி இறைச்சி கடைகள் முதல் எலக்ட்ாிக்கல் கடை வரை 190 பழுதடைந்த கடைகள் இடித்து விட்டு தரைத்தளத்தில் 126 நான்கு சக்கர வாகனங்கள், 163 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் பார்க்கிங் தளமும், முதல் தளத்தில் 240 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக ஏடிசி., பகுதியில் உள்ள பார்க்கிங் தளங்களில் முதற்கட்டமாக 100 கடைகள் கட்டப்பட்டன. இதில், தற்போது வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்டமாக இடிக்கப்பட்ட கடைகள் இருந்த இடத்தில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

மேலும், இரண்டாம் கட்டமாக கடைகள் இடிக்கும் பணிக்காக தற்போது மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், இந்த கடைகளை காலி செய்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இதற்காக தற்போது, ஏடிசி., பார்க்கிங் தளத்தில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக கட்டப்பட்ட கடைகள் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்ட நிலையில், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

எனவே, தற்போது புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு 5 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் அமைக்கப்பட்டு கடைகள் கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை ஊட்டி நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் சேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வியாபாரிகளுக்கு எவ்வித இடையூறு இன்றியும், மழைக்காலங்களில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையிலும் கடைகள் கட்டப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் துணைத்தலைவர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர் ரவி, உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post ஊட்டி நகராட்சி தற்காலிக மார்க்கெட்டில் கூடுதல் கடைகள் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article