சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம், ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சுற்றுலா பயணிகள் வருகை குறித்த புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானல் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் வீடியோ கான்பரன்சில் ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு மாவட்ட கலெக்டர்கள் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும். உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். இபாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இபாஸ் பெற்ற பிறகே வாகனங்களை அனுமதிக்க வேண்டும். இபாஸ் பெறுவதற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல் 5 கிலோமீட்டர் தூரத்தில்கூட சென்டர்களை வைக்கலாம். கியூஆர் கோர்டு மூலம் இபாஸ் பெறவும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.
இபாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள், ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா என்பது குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாமல்லபுரத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிப்பதுபோல் வாகனங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வருபவர்களிடமும் வசூலிக்க முடியுமா?. இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்குமே என்று தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து கருத்து தெரிவிக்கவும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
The post ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.