ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறை: ஐகோர்ட்டு அதிருப்தி

1 month ago 9

சென்னை

சுற்றுச்சூழல், வனம், வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த நீதிபதிகள், வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை விடுமுறைக்கு கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூட்டம் வருவதால், சுற்றுச்சூழல் மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. விடுதிகளில் போதுமான அறைகளும் இல்லை. அதனால், கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்து இ-பாஸ் முறைப்படி சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர்.

அதில், இ–பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்? எத்தனை பேர் வருகின்றனர்? எத்தனை நாட்கள் தங்குவார்கள்? எங்கு தங்குவார்கள்? உள்ளிட்ட விவரங்களைப் பெறவேண்டும்'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி இ-பாஸ் முறை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த நடைமுறையை கோடைகாலம் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை. இந்த ஐகோர்ட்டு உத்தரவை காகித வடிவில் மட்டுமே இரு மாவட்ட கலெக்டர்களும் வைத்துள்ளனர். இ-பாஸ் தொடர்பாக எந்த சோதனையும் செய்யப்படுவதில்லை. குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள சோதனைச்சாவடியில் ஒருவர்கூட இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதற்கு அரசு தரப்பில், மலை பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு தரப்பில் தவறான தகவல்களை ஐகோர்ட்டுக்கு தரவேண்டாம். இ-பாஸ் நடைமுறையாக அமல்படுத்துவது தரமான சுற்றுலாவிற்கு வழிவகுக்கும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்துவது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற நவம்பர் 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று கூறினர்.

Read Entire Article