ஊட்டி : ஊட்டி அருகே எப்பநாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் பொதுமக்கள் இடையே மனித வனவிலங்கு மோதல் குறித்து கலை நிகழ்ச்சி, வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக உள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
தற்போதைய சூழலில் வன விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றாற்போல் தீவன பற்றாகுறை, வனப்பரப்பு இல்லாதது, ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதன் – வனவிலங்குகள் மோதல் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது.
சமீபகாலமாக வன விலங்குகள் அடிக்கடி மனிதர்களை தாக்குவதும், இதன் காரணமாக மனிதர்கள் காயமடைவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் குந்தா பகுதியில் சிறுத்தை தாக்கி கூலி தொழிலாளி ஒருவரும், ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி பெண் ஒருவரும், புலி தாக்கி பழங்குடியின இளைஞர் ஒருவரும் இறந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் ஊட்டி வடக்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையில் எப்பநாடு கிராமத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் அமைப்புடன் இணைந்து கிராம மக்களுக்கு மனித-வன விலங்கு மோதல் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீதி நாடகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, வனத்துறையினர் கூறுகையில், ‘‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டில் சுமார் 10 பேர் வனவிலங்கு தாக்குதலுக்கு பலியாகின்றனர். அதிகமானோர் காட்டுமாமு மற்றும் யானையின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஒரு சில இடங்களில் சிறுத்தை அல்லது புலியின் தாக்குதல் நிகழ்கிறது.
வன விலங்குகளின் உணவு பழக்கத்தை மனிதர்கள் மாற்றியதன் காரணமாகவே வன விலங்குகளுக்கு தேவையான உணவு வனப் பகுதியிலேயே கிடைத்தாலும், நாம் அவற்றிற்கு உணவளித்தும், வீடுகளில் மீதமாகும் உணவுகள் மற்றும் பழ வகைகளை பொது குப்பைத் தொட்டியில் கொட்டி வந்ததன் காரணமாக அவற்றை உண்டு பழகிய வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு தொடர்ந்து படையெடுத்த வண்ணம் உள்ளன. எனவே வன விலங்குகளின் உணவுப் பழக்கம் மாறாமலிருக்க, வீடுகளில் சேகரமாகும் உணவு கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல், வீடு தோறும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும்’’ என்றனர்.
The post ஊட்டி அருகே வனத்துறை சார்பில் மனித-வன விலங்கு மோதல் குறித்து வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.