*பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
ஊட்டி : ஊட்டி அருகே தொட்டபெட்டா காட்சிமுனை பகுதிக்கு காட்டு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அவசர, அவசரமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2637 மீட்டர் உயரத்தில் ஊட்டி தொட்டபெட்டா சிகரம் உள்ளது.
இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்சி கோபுரம் உள்ளது. இங்குள்ள தொலைநோக்கி மூலம் பார்த்தால் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
மேலும், இயற்கை அழகையும் பார்த்து ரசிக்க முடியும். இதனால், தொட்டபெட்டா சிகரத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. அடர்ந்த வனத்தின் நடுவே தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ள நிலையில் சுமார் 2 கிமீ தூரம் பயணித்து சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தொட்டபெட்டா காட்சிமுனை பகுதிக்கு வந்தது. இதனால், சாலையில் சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
முதல் கட்டமாக சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவருடன் சேர்த்து கடைக்காரர்களையும் கடைகளை பூட்ட சொல்லி அனுப்பி விட்டனர். யானை வனத்திற்குள் சென்று மறைந்த நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அங்கு கடை வைத்துள்ளவர்கள் கூறுகையில்,“பல ஆண்டுகளாக தொட்டபெட்டா பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது கிடையாது முதல் முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது. காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
The post ஊட்டி அருகே பரபரப்பு தொட்டபெட்டா சிகரத்திற்கு விசிட் அடித்த காட்டு யானை appeared first on Dinakaran.