சென்னை: தமிழகத்தில் அரைநூற்றாண்டாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் சமூக சீர்திருத்தங்களில் சாதித்தன; ஆனால் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன என்று சிபிஎம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து இன்று இக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கிற கொள்கைகளை அகற்றி உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில் வலுப்பெற வேண்டும். நவீன தாராளமய பொருளாதார பாதை உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரிசெய்வதற்கான வல்லமை இடது மாற்றுகே உண்டு.