மும்பை,
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதே சமயம் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், கருண் நாயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதில் கருண் நாயர் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி விதர்பா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 5 சதம் உள்பட 779 ரன்கள் அடித்தார். அதன் காரணமாக அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அவர் இடம்பெறவில்லை.
இது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் அகர்கர், அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் 15 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் கருண் நாயரை சேர்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உள்ளூரில் விளையாடி நல்ல பார்மில் இருக்கும் வீரரை தேர்ந்தெடுக்கவில்லையெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் என்ன பயன்? என்று ஹர்பஜன் சிங் மறைமுகமாக அகர்கரை விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன், தனது எக்ஸ் பக்கத்தில், "பார்ம் மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை எனில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? கருண் நாயர்" என்று பதிவிட்டுள்ளார்.