சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வருகிற மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல்களை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்ளது. 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 133 காலி பதவியிடங்களுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலி பதவியிடங்களுக்கும் இடைத்தேர்தல்களை வருகிற மே மாதம் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதம் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.