சென்னை: உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் தலைமையில் இன்று மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், திருப்போரூர் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமை தாங்குகிறார்.
பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், மாநில செயலாளர் பனையூர் பாபு, முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை தலைவர் உ.வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா, மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொக்கையா, காங்கிரஸ் எம்.பி.வக்கீல் சுதா, மனிதநேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாத்திமா முசபர், தமிழக வாழ்வுரிமை கட்சி முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யா வழி வைகுண்டர் இயக்க தலைவர் பால.பிரஜாபதி அடிகளார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பெண்களே நடத்தும் இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மது மற்றும் போதை பொருட்களை முற்றாக ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மாநாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடையுடன் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு appeared first on Dinakaran.