உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் கைவரிசை இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த சகோதரர்கள் தாயுடன் கைது

1 month ago 5

*42 பவுன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி, 2 பைக் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் சகோதரர்கள் தாயுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 42 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 11 இடங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு போனது.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், குமரேசன், பிரபாகரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே எறையூர்- வடகரும்பூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்தவரை மடக்கி விசாரணை செய்தனர். அதில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் விஜய் (29) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தனது தம்பி விக்னேஷ் (24) என்பவருடன் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் அந்த வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டது தெரிய வந்தது, மேலும் இதுபோல் சுமார் 14 இடங்களில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து விஜய், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு உடந்தையாக இருந்த தாய் வீரம்மாள் (50) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 42 பவுன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி, ரூ.80 ஆயிரம் பணம், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் கைவரிசை இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த சகோதரர்கள் தாயுடன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article