உளுந்தூர்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது

2 months ago 10

உளுந்தூர்பேட்டை: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எலவனாசூர்கோட்டை. இப்பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன் (45). இவர் நெடுமானூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவி ஜெயா (40) என்பவருடன் சேர்ந்து கடந்த ஒரு வருட காலமாக எலவனாசூர்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளிடம் தீபாவளி சீட்டு போடுவதாக கூறி மாதந்தோறும் ரூ.1,000 வசூல் செய்து வந்துள்ளனர். அந்த பணம் தீபாவளி சமயத்தில் திருப்பி தருவதாக கூறிய இருவரும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் பணத்தை தராமல் பணம் கட்டியவர்களிடம் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கியும், நகை வாங்கியும் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டு ரூ.50 லட்சம் வரையில் பணத்தை வசூல் செய்து அதை திருப்பி தராமல் ஏமாற்றிய வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article