*பொதுமக்கள் கோரிக்கை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர் பேட்டை அருகே அரசு மறுவாழ்வு இல்லத்தில் பயனற்று கிடக்கும் இடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இக்கிராமத்தில் அரசு மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1972ல் அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அளித்த பங்களிப்பு நிதியின்கீழ் தொழு நோயாளிகளுக்கான பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம் என இந்த இல்லம் துவங்கப்பட்டது.
அன்றைய காலக்கட்டத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளுடன் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்காக மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது. இந்த இல்லத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றனர். இதனைத் தொடர்ந்து காலப்போக்கில் தொழுநோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது அங்கு 45 நபர்கள் மட்டுமே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மறுவாழ்வு இல்லவாசிகளுக்கு அரசு சார்பில் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வந்தாலும் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் பண்டிகை காலங்களில் உதவி வருகின்றனர். இந்த மறுவாழ்வு இல்லம் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடமாகவும் அதில் 14 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு துவங்கப்பட்டது. தற்போது குறைந்த அளவிலான இல்ல வாசிகள் இருப்பதால் 3 கட்டிடங்களில் மட்டுமே தங்கி வசித்து வருகின்றனர்.
மீதமுள்ள கட்டிடங்கள் அனைத்தும் தற்போது பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் இந்த மறுவாழ்வு இல்லத்தில் தறிப்பட்டறை உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்களுக்கென தனியாக கட்டிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த கட்டிடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கடந்த 53 ஆண்டுகளாக மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வந்தாலும், தற்போது இல்லவாசிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தேவையில்லாத கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள தேவையற்ற கட்டிடங்களை இடித்து அரசின் மாற்று பணிக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு மற்றும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் ஆகியோர் வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தற்போது வசிக்கும் இல்லவாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், தேவையற்ற கட்டிடங்கள் மற்றும் காலி இடங்களில் அரசின் பயன்பாட்டிற்கு உண்டான கட்டிட வசதிகள் ஏற்படுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக இந்த இடத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட அரசின் பயன்பாட்டிற்கு உரிய கட்டிடங்கள் கொண்டுவர வேண்டுமெனவும் உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உளுந்தூர்பேட்டை அருகே அரசு மறுவாழ்வு இல்லத்தில் பயனற்று கிடக்கும் இடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.