
சென்னை,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறுவகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கவும், அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும், நாபெட், என்.சி.சி.எப். நிறுவனங்கள் கொள்முதல் முகமைகளாகவும் செயல்பட்டு வருகின்றன.
அரியலூர், ராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், நெல்லை, தென்காசி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.74 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.74 என்று கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 38 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயிறு கிலோ ஒன்றிற்கு ரூ.86.82 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களை அணுகி சிட்டா, அடங்கல், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது பெறப்படும் கடவு சொல்லை பகிர்ந்து உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை விற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 3 நாட்களுக்குள் அவர்களது வங்கி கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.