
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே சிக்கரூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக் (வயது 30). இவருக்கும் சல்மா (25) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், திருமணத்திற்கு முன்பு சல்மா, ஜாபர் (28) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அவருடன் சல்மா நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த கள்ளக்காதல் குறித்து சாதிக்கிற்கு தெரியவந்ததும், அவர் சல்மாவை கண்டித்தார். இருப்பினும் கள்ளக்காதலை கைவிட மணமில்லாமல் சல்மா தொடர்ந்தார்.
கடந்த 25-ந் தேதி இது தொடர்பாக சல்மா, சாதிக் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கணவர் மீது கோபம் அடைந்த சல்மா உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதுகுறித்து அவர், காதலன் ஜாபரிடம் கூறினார். அதன்படி சம்பவத்தன்று இரவு சல்மா மற்றும் ஜாபர் சேர்ந்து, சாதிக்கின் கழுத்தை நெரித்தனர். இதில் அவர் மயங்கி விழுந்ததும், மரக்கட்டையால் சாதிக்கை தாக்கினர். இதில் சாதிக் பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். இதையடுத்து உடலை குளியல் அறைக்கு இழுத்து சென்று ரத்த கறைகளை அகற்றினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் சாதிக் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக கூறி சல்மா நாடகமாடினார். ஆனால் உண்மை தெரியாத அவரது குடும்பத்தினர், இறுதிச்சடங்கு செய்து, சாதிக்கின் உடலை புதைத்தனர்.
இந்தநிலையில் சாதிக்கின் சகோதரருக்கு சல்மாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. அவர் சாதிக் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி ஹம்சபாவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
குறிப்பாக சாதிக்கின் மனைவி சல்மாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக போலீசாரிடம் தகவல் அளித்தார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சாதிக்கை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார். அதாவது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாதிக்கை கள்ளகாதலன் ஜாபருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியதாக தெரிவித்தார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.