திருமலை: உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கணவனை கழுத்தை அறுத்துக் கொன்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பரூக் நகர் அருகே உள்ள சின்னசில்காமரி கிராமத்தை சேர்ந்தவர் யாதய்யா (32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மவுனிகா (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி யாதய்யா மாயமானதாக கூறி அவரது மனைவி மவுனிகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இருப்பினும் யாதய்யா குறித்து எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே கணவன் மாயமானதாக கூறி புகார் அளித்த மவுனிகா, அதேபகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக் (30) என்பவருடன் வசிப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சந்தேகம் வலுப்படவே நேற்று முன்தினம் மவுனிகா மற்றும் அசோக்கிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.
போலீசில் மவுனிகா அளித்த வாக்குமூலம்: எனது கணவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் எங்கள் பகுதியில் உள்ள காட்டன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஆட்டோ டிரைவர் அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் எங்கள் வீட்டில் கணவர் இல்லாதபோது அடிக்கடி தனிமையில் இருந்து வந்தோம்.
ஆனால் திடீர் திடீரென கணவர் வீடு திரும்பிவிடுவதால் எங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே கணவனை கொன்றுவிட்டு அசோக்குடன் வாழ விரும்பினேன். இதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு சென்றுவரலாம் வா என எனது கணவரை அசோக்கின் ஆட்டோவில் அழைத்துச்சென்றேன். வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தச்செய்து எனது கணவருக்கு, அசோக் அதிக மது ஊற்றி கொடுத்தார்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த எனது கணவரை நானும் அசோக்கும் சேர்ந்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றோம். பின்னர் அங்குள்ள முட்புதரில் கணவனின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தோம். இவ்வாறு மவுனிகா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் கொலை நடந்த இடத்திற்கு இருவரையும் அழைத்துச்சென்று அங்கிருந்த யாதய்யாவின் எலும்புகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
The post உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கழுத்தை அறுத்து கணவன் கொலை பெட்ரோல் ஊற்றி சடலம் எரிப்பு: கள்ளக்காதலனுடன் மனைவி கைது appeared first on Dinakaran.